பெரியாரும், பிள்ளையாரும்… இணையத்தில் கவனம் பெறும் பாலாவின் ‘வணங்கான்’ டீசர்!
சேது, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என முக்கியமான திரைப்படங்களை இயக்கிய பாலாவுக்கு வர்மா படம் பின்னடைவாக அமைந்தது. அவர் மீண்டும் பழைய பாலாவாக திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில், அவரது ரசிகர்கள் அவரது புதிய படத்தை எதிர்நோக்கியிருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பின் பாலா, சூர்யா நடிப்பில் வணங்கான் படத்தைத் தொடங்கினார். ஒரு ஷெட்யூல்ட் முடிந்த நிலையில், படத்திலிருந்து சூர்யா விலகினார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட பாலா, “வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது” என அதில் கூறியிருந்தார். இதையடுத்து, வணங்கானில் அருண் விஜய் ஒப்பந்தமானார்.
அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ‘வணங்கான்’ பட டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், ஒரு கையில் பெரியார் சிலையும், மறு கையில் பிள்ளையார் சிலையும் வைத்திருக்கும் அருண் விஜய்யின் காட்சி கவனம் பெற்றுள்ளது.