ஜெய்ஸ்வால் உங்களை பார்த்து அதிரடியா விளையாடுறாரா? இப்படி பேச வெட்கமா இல்ல? இங்கி. சாடிய நாசர் ஹூசைன்
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக இரட்டை சதம் அடித்து அசத்தியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடும் பழக்கத்தை கடந்த சில ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறது.
இதற்கு பேஸ் பால் என்று ரசிகர்கள் பெயரிட்டு வருகிறார்கள். இங்கிலாந்து அணியில் இந்த போக்கு அவர்களுக்கு பல போட்டிகளில் வெற்றியையும் கொடுத்திருக்கிறது. சில போட்டிகளில் தோல்வியும் கொடுத்திருக்கிறது.
இதனால் இந்த முறையை இங்கிலாந்து அணி மாற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடுவதை பொறுத்துக் கொள்ள முடியாத இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கட், ஜெய்ஸ்வால் தங்களைப் பார்த்துதான் அதிரடியாக விளையாடும் முறையை கடைப்பிடிப்பதாக கூறியுள்ளார்.
இந்தத் தொடரில் ஜெய்ஸ்வால் 22 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார். இதன் மூலம் டெஸ்ட் தொடரில் 20 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை ஜெய்ஸ்வால் படைத்திருக்கிறார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் டக்கட், எதிரணியில் இருக்கும் வீரர்கள் அதிரடியாக விளையாடுவதை பார்க்கும் போது அதற்கான பாராட்டை நாமும் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாம்.
ஏனென்றால் இங்கிலாந்தை பார்த்து தான் பலரும் இப்படி அதிரடியாக விளையாடுகிறார்கள் என்று கூறினார்.பென் டக்கட்டின் இந்த பேச்சுக்கு இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதில் ஜெயஸ்வால் எங்களைப் பார்த்து கற்றுக் கொண்டிருக்கிறார் என இங்கிலாந்து வீரர் பேசியிருக்கிறார்.
அதைப்பற்றி நான் சில கருத்துக்களை கூற வேண்டும். ஜெய்ஸ்வால் ஒன்றும் உங்களைப் பார்த்து கற்றுக் கொள்ளவில்லை. அவர் வளரும் போதே கடினமான பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறார். அவருடைய உழைப்பும் திறமையும் தான் இதற்கு காரணம். அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார். என்னைக் கேட்டால் நீங்கள் தான் ஜெய்ஸ்வாலிடமிருந்து பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.
பொதுவெளியில் என்ன பேசுகிறோம் என்று கூடத் தெரியாமல் பேசுகிறார்கள். இது நிச்சயம் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. தயவு செய்து நாம் என்ன பேசினோம் என்பது குறித்து நீங்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஜெய்ஸ்வாலைப் பார்த்து விளையாடுங்கள். இங்கிலாந்தின் இந்த பேச்சு ரசிகர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
சில சமயம் பேஸ் பால் முறையை குறித்து யாருமே விமர்சிக்க கூடாது என்பது போல் இங்கிலாந்து அணி மாற்றிவிட்டது. ஆனால் இந்த முறையிலேயே பாடம் கற்றுக் கொள்ளவும் முன்னேற்றிக் கொள்ளவும் அதிக வாய்ப்பு இருக்கிறது என்று நாசர் உசேன் கூறியுள்ளார். தற்போது மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து நிலையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 23ஆம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது.