தோனி மீது மனோஜ் திவாரி புகார்.. என் கிரிக்கெட் வாழ்க்கையே போச்சு.. கோலி, ரோகித் போல் ஆகி இருப்பேன்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணி வீரர் மனோஜ் திவாரி ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு வயது 38. மனோஜ் திவாரி கிரிக்கெட்டில் இருந்தாலும் மேற்குவங்க மாநில அரசின் அமைச்சராகவும் இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய கடைசி ரஞ்சிப் போட்டியில் விளையாடிய பிறகு மனோஜ் திவாரி ஓய்வு முடிவை அறிவித்தார்.

இந்திய அணிக்காக மனோஜ் திவாரி, 12 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 287 ரன்கள் அடித்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மனோஜ் திவாரி சதம் விளாசினார்.

மேலும் தோனி தலைமையில் மூன்று டி20 போட்டியிலும் இந்தியாவுக்காக மனோஜ் திவாரி விளையாடியுள்ளார். இந்த நிலையில் ஓய்வு பெற்றது குறித்து செய்தியாளரிடம் பேசிய மனோஜ் திவாரி, 2011 ஆம் ஆண்டு சதம் அடித்த பிறகும் என்னை ஏன் அணியில் இருந்து தோனி நீக்கினார் என்று அவரிடம் கேட்க நான் ஆசைப்படுகிறேன். ரோகித் சர்மா, விராட் கோலி போல் நானும் ஒரு நட்சத்திர வீரராக ஆகியிருப்பேன்.

அந்த அளவுக்கு என்னிடம் திறமை இருந்தது. ஆனால் அப்படி நடக்கவில்லை. பல இளைஞர்கள் தற்போது வாய்ப்பு கிடைத்து ஜொலித்து வருகிறார்கள். அதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இளம் வீரர்கள் பலர் ஐபிஎல் விளையாடினாலே போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள். இதனால் தான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை.

இப்போது நான் பி சி சி ஐ குறித்து ஏதேனும் கருத்து தெரிவித்தால் எனக்கு தடை விரிக்க வாய்ப்பு இருக்கிறது. நான் ரஞ்சி கிரிக்கெட்டை நீக்கி விடுங்கள் என்று கூறியது பிசிசிஐ செயலாளருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தான் வீரர்கள் ரஞ்சிப் போட்டியில் கண்டிப்பாக விளையாடவேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் யார் சிறந்து விளங்குகிறார்களோ அவர்கள் ரஞ்சிப் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனை பிசிசிஐ உணர வேண்டும்.இது குறித்து நான் முன்பே பேசி இருப்பேன்.ஆனால் பிசிசிஐ முன்பு போல் விளையாட்டு துறை நிபுணர்களால் நிர்வகிக்கப்படவில்லை. தற்போது அரசியல்வாதிகளின் ஆதிக்கம் தான் பிசிசிஐயில் இருக்கிறது.

நானும் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் தான்.ஆனால் நான் ஒரு விளையாட்டு வீரன். நான் எந்த மோதலிலும் ஈடுபட விரும்பவில்லை. எனக்கு ரஞ்சிப் போட்டிக்கு இளம் வீரர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய கருத்து. ரஞ்சி கிரிக்கெட் மட்டுமே விளையாடும் வீரர்களின் ஊதியத்தை உயர்த்தி தரவேண்டும் என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *