ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு 370ஆவது பிரிவு மிகப்பெரிய தடையாக இருந்தது: பிரதமர் மோடி!

பிரதமர் மோடி, இன்று ஜம்முவில் பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்குள்ள மௌலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் ரூ. 32,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார். ஐஐஎம் ஜம்மு மற்றும் ஐஐஎம் புத்த கயா, ஐஐஎம் விசாகப்பட்டினம் ஆகிய மூன்று ஐஐஎம் வளாகங்களையும், ஜம்முவின் விஜய்பூர் (சம்பா) பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு 370வது பிரிவு மிகப்பெரிய தடையாக இருந்தது. பாஜக அரசு அதை நீக்கிவிட்டது. இப்போது ஜம்மு-காஷ்மீர் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததால், தேர்தலில் பாஜக 370 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களையும் வெல்ல உதவுமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

ஜம்மு-காஷ்மீரில் ஒரு காலத்தில் பள்ளிகள் எரிக்கப்பட்டன, இன்று பள்ளிகள் அலங்கரிக்கப்படுகின்றன என பிரதமர் மோடி கூறினார். 2014ஆம் ஆண்டுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் 4 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில் தற்போது 12 மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாகவும், ஜம்மு காஷ்மீரில் சுகாதார வசதிகள் வேகமாக மேம்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கு பாஜகவின் லால்கர் பேரணியில் பங்கேற்றபோது, ஜம்முவில் ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களை ஏன் கட்ட முடியாது என்ற கேள்வியை எழுப்பினேன். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இன்று ஜம்முவில் ஐஐடி மற்றும் ஐஐஎம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

“ஜம்மு-காஷ்மீர் மக்கள் பல ஆண்டுகளாக வாரிசு அரசியலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள். உங்கள் நலன்கள், உங்கள் குடும்பங்கள் பற்றி அல்ல. இந்த வாரிசு அரசியலில் இருந்து ஜம்மு காஷ்மீர் விடுதலை பெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.” என பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி, ஜம்முவில் இன்று தொடங்கி வைத்த திட்டங்களில் சுகாதாரம், கல்வி, ரயில்வே, சாலை, விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம், குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளை சார்ந்த திட்டங்கள் அடங்கும். இந்த நிகழ்ச்சியின் போது, ஜம்மு காஷ்மீரில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 1500 பேருக்கு பணி நியமன ஆணைகளைப் பிரதமர் வழங்கவுள்ளார். ‘ வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு’ திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடனும் பிரதமர் கலந்துரையாடவுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியன்று மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும் என்றும், சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும் என தீர்ப்பளித்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *