உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில்வே வழித்தடம்! காஷ்மீர் – கன்னியாகுமரி இணைப்பில் மற்றொரு மைல்கல்!
ஜம்மு காஷ்மீரில் 48.1 கிலோமீட்டர் நீளமுள்ள பனிஹால் சங்கல்தான் பகுதியில் உதம்பூர் – ஸ்ரீநகர் – பராமுல்லாவை இணைக்கும் ரயில் வழித்தடத்தை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்க இருக்கிறார்.
இது குறித்து இந்திய ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “இத்திட்டம் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை ரயில் மூலம் இணைக்கும் கனவை நனவாக்குவதில் முக்கிய முன்னகர்வாக இருக்கும்” என்கிறார். “உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) திட்டம் சுதந்திரத்திற்குப் பிறகு இமயமலை பகுதியில் தொடக்கப்பட்ட மிகவும் முக்கியமான ரயில்வே திட்டங்களில் ஒன்றாகும்” எனவும் அவர் சொல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ரயிலின் இயக்கத்தை தொடங்கி வைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இத்தகவல் அரசு தரப்பில் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) திட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியை ஜம்மு மற்றும் நாட்டின் பரந்த ரயில்வே நெட்வொர்க்கில் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மொத்தம் 272 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியது. இதில் 161 கிலோமீட்டர் வழித்தடம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.
பனிஹால்-காரி-சம்பர்-சங்கல்தான் பிரிவு ரூ.15,863 கோடியில் நிறைவடைந்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இப்போது பாரமுல்லாவில் இருந்து பனிஹால் வரை இயக்கப்படும் தற்போதைய ரயில் சேவைகள், இனி ரம்பன் மாவட்டத் தலைமையகத்திற்கு அருகில் அமைந்துள்ள சங்கல்தான் வரை நீட்டிக்கப்படும்.
மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் இந்தத் திட்டத்தைப் பற்றிப் பேசுகையில், “பிர் பஞ்சால் மலைத்தொடர்களின் சவாலான நிலப்பரப்பில், உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து வானிலையிலும் வசதியான மற்றும் பொருளாதார ரீதியாக சாத்தியமான போக்குவரத்து நெட்வொர்க்கை நிறுவும் திட்டம் இது. தொலைதூர இமயமலைப் பகுதிகளை மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது” என்கிறார்.
இந்த வழித்தடத்தில் 11 பெரிய பாலங்கள் உள்பட மொத்தம் 16 பாலங்கள் உள்ளதாகவும் ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். வழித்தடத்தின் மொத்த நீளத்தில் 90% சுரங்கப்பாதை வழியாகச் செல்கிறது. 11 சுரங்கங்கள் 43.37 கிலோமீட்டர் தூரத்திற்கு நீள்கின்றன. இது நாட்டின் மிக நீளமான போக்குவரத்து சுரங்கப்பாதையான T-50 சுரங்கப்பாதையையும் உள்ளடக்கியது.
அவசர காலங்களில் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக மூன்று தப்பிக்கும் சுரங்கங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்துவதற்காக, சிசிடிவி கண்காணிப்பு போன்ற பல மேம்பட்ட அம்சங்களும் இந்த வழித்தடத்தில் இருக்கும்.