படித்தது 9ஆம் வகுப்பு.. பார்த்தது லாரி டிரைவர் வேலை! இப்போ கோடீஸ்வரர்! என்ன தொழில் பண்றார் தெரியுமா?

மும்பை: 9ம் வகுப்பு மட்டுமே படித்த தெலுங்கானாவைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் இப்போது கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டும் தொழில் செய்துவருகிறார். யார் நினைத்தாலும் செய்யக் கூடிய தொழில்தான் அது என்பதுதான் இதில் சிறப்பம்சமாகும்.

ஐக்ரிசாட் எனப்படும் சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் விவசாயிகளுக்கு சோளம் சாகுபடி பற்றிய பயிற்சியை அளித்தது. இந்த பயிற்சியைப் பெறுவதற்காக பிரதர் வீர் ஷெட்டி பீட் நகருக்குச் சென்றார். அப்போது முதல் அவரது வாழ்க்கை மாறியது.

ஐக்ரிசாட்டின் இந்த பயிற்சியின் நோக்கம் சோளம் சாகுபடியை ஊக்குவித்து புதிய ரக சோளத்தை அறிமுகம் செய்வதாகும்.

இந்தப் புதிய ரகங்கள் வீரிய வகை என்பதால் அதிகளவு மகசூல் கிடைக்கும். இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். இந்த பயிற்சி பிரதர் வீர் ஷெட்டியின் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக இருந்தது.

தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதர் வீர் ஷெட்டிக்கு இப்போது வயது 50 ஆகிறது.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கும் விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஆனால் ஷெட்டியை அவரது குடும்பம் நல்ல வேலையில் சேர விரும்பியது. இதனால் அவரது வீட்டில் இருந்து 10 கி.மீ. தள்ளியிருந்த பள்ளியில் சேர்ந்து படித்தார்.

அந்தப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. அதற்கு மேல் படிக்க வேண்டுமென்றால் 25 கி.மீ. தள்ளியுள்ள பள்ளிக்குச் செல்ல வேண்டும். இந்த நிலையில் படிப்பு மேல் நாட்டமில்லாத ஷெட்டி 9 ஆம் வகுப்புடன் நிறுத்தி விட்டார். பின்னர் அவர் ஒரு லாரி டிரைவர் வேலையில் சேர்ந்தார்.

1990 இல் இருந்து 1997 வரை அந்த வேலையைத் தான் செய்து வந்தார். இருப்பினும் தான் ஒரு சுய தொழிலைச் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் என்ன தொழில் செய்வது என்று புரியாமல் இருந்தார். இந்த நிலையில் 2006இல் அவருக்கு ஹைதராபாத்தில் உள்ள இக்ரிசாட்டில் டிரைவர் கம் உதவியாளர் வேலை கிடைத்தது. டாக்டர் ரவிந்திர ரெட்டி, டாக்டர் அசோக் அலுர் ஆகியோரின் கீழ் ஷெட்டி வேலை பார்த்தார். இதனிடையே ஷெட்டி 10ஆம் வகுப்பை படித்து முடித்தார். வேலையில் இருந்தபடி படிக்கவும் செய்த ஷெட்டியை அவரது முதலாளிகள் பாராட்டினர்.

ஒருமுறை மகாராஷ்டிராவுக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய ஷெட்டி தான் சிறுதானிய தொழில் செய்ய விரும்புவதாக டாக்டர் ரெட்டியிடம் கூறினார். அதற்கு ரூ.20,000 தேவை என்று ஷெட்டி கேட்டார். அந்தப் பணத்தை அவருக்கு டாக்டர் ரெட்டி தந்தார்.

அதை வைத்து ஒரு சிறிய கடையைத் திறந்து அதில் சோள ரொட்டியை செய்து விற்றார் ஷெட்டி. ஹைதராபாத்தில் அந்தக்கடையை ஷெட்டி திறந்தபோது பலரும் அவரை கேலி செய்தனர். இந்தக் காலத்தில் சோள ரொட்டியை வாங்கி யார் சாப்பிடுவார்கள் என்று கூறினார்கள்.

இப்போது ஷெட்டி 5 கடைகள் வைத்து அதில் நீண்ட வரிசையில் காத்திருந்து சோள ரொட்டியை மக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர்.

சோள ரொட்டியில் நிறைய சத்துகள் இருப்பதால் அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பியதாக ஷெட்டி கூறினார். 2016இல் ஷெட்டி, ஸ்வயம் சக்தி அக்ரி பவுண்டேஷன் என்ற ஒரு என்ஜிஓ அமைப்பை தொடங்கி விவசாயிகளுக்கு உதவினார். மழையை நம்பி பயிர்களை விளைவித்து அதற்கு சரியான விலை கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பதைப் பார்த்து அவர்களுக்கு உதவ இந்த அமைப்பைத் தொடங்கினேன் என்கிறார் ஷெட்டி.

இந்த நிலையில் அவர் தொடங்கிய பவானி புட்ஸ் நிறுவனத்தில் சிறுதானியங்கள் பதப்படுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு சிறுதானிய உணவுகளைத் தயாரிக்கும் முறையையும் ஷெட்டி சொல்லித் தந்தார். 2016இல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மில்லட் ரிசர்ச் அமைப்பில் இருந்து சோள சாகுபடியை ஊக்குவிக்கும் ஒரு திட்டத்தை ஷெட்டி பெற்றார்.

ஐஎம்ஆர்ஐ இலவச சோள விதைகளை அளித்தது. அவர்களது மைய வளாகத்திலேயே ஒரு பதப்படுத்தும் ஆலையையும் அமைத்தனர். தொடக்கத்தில் விவசாயிகள் சோளத்தை பயிரிட்டனர். பின்னர் அவர்கள் 8 வகையான சிறுதானியங்களை பயிரிட்டனர். சோளம், கம்பு, கேப்பை, குதிரைவாலி, வரகு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்தனர். தனது என்ஜிஓ வாயிலாக ஷெட்டி விவசாயிகளுக்கு நல்ல வீரியமான விதைகளை வழங்கினார். சோள பயிரை எப்படி பயிரிடவேண்டும், எவ்வளவு இடைவெளியில் நட வேண்டும், தண்ணீர் பாய்ச்சுவது உள்ளிட்ட வழிகளை சொல்லித் தந்தார்.

விளைந்த பயிரை அறுத்து அதை பேக்கேஜ் செய்யவும் பயிற்றுவித்தார். இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. இத்துடன் ஷெட்டியும் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூரில் ஒரு பதப்படுத்தும் ஆலையைத் தொடங்கினார். அதில் சிறுதானியங்களை பதப்படுத்தும் பயிற்சியை விவசாயிகளுக்கு அளித்தார். ஒரு பருவத்துக்கு ஒரு ஏக்கரில் ரூ.30,000ஐ விவசாயிகள் சம்பாதித்தனர். குருவை மற்றும் சம்பா பருவ சாகுபடி மூலம் ரூ.60,000 கிடைத்தது. மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 2 கிலோ பாக்கெட் சிறுதானிய விதைகளை ரூ.100க்கு விற்றார்.

மத்திய அரசு நிதியுடன் தெலங்கானாவின் வாராங்கல், மெஹபூப்நகர், சங்காரெட்டி மாவட்டங்களில் ஊரக திட்டங்களை ஷெட்டி செயல்படுத்தினார். இந்தத் திட்டத்தின்கீழ் 30 பெண்கள் கொண்ட 3 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் 500 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. விவசாயிகளிடமிருந்து இந்தப் பெண்கள் கொள்முதல் செய்யும் சிறுதானியத்தில் இருந்து உணவு தயாரித்தல் மற்றும் மார்க்கெட்டிங் செய்யப்பட்டது.

வாராங்கல், மெஹபூப்நகர், சங்கரெட்டி மாவட்டங்களில் பெண்கள் தயாரிப்புகளை தயாரிக்கும் செயலாக்க அலகுகளை அரசு அமைத்துள்ளது. செயலாக்கத்தில் தினை தானியத்தில் உள்ள உமியை இயந்திரமயமாக்கப்பட்ட டீஹல்லரில் வைத்து அகற்றுவது அடங்கும். அதன் பிறகு, தானியத்தை அரைத்து, பல்வேறு உணவுப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

வியாபாரத்தை வளர்க்கும் ஷெட்டி சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஏற்ற இயற்கை விவசாயத்தை மேற்கொள்கிறார். மேற்கு தெலங்கானா மற்றும் கர்நாடகாவின் எல்லையோர மாவட்டங்களின் வறண்ட நிலப்பகுதிகளுக்கு இயற்கை விவசாயம் மிகவும் பொருத்தமானது.

ஷெட்டி மற்றும் அவரது உறவினர்கள் கங்காபூரில் உள்ள தனது 15 ஏக்கர் நிலத்தில் தினை பயிரிட்டுள்ளனர். அவர்கள் ஒரு செயலாக்க அலகு அமைத்துள்ளனர். உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக அவர் 2008 இல் நிறுவிய பவானி ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் மில்லோவிட் பிராண்டின் கீழ் தயாரிப்புகள் விற்கப்படுகின்றன. அவர் 2016 ஆம் ஆண்டில் அக்ரோ ஃபுட்ஸ் என்ற மற்றொரு நிறுவனத்தை நிறுவினார், இது விவசாயிகளிடமிருந்து தினைகளை வாங்கி அவற்றை பதப்படுத்தி பொருட்களை தயாரிக்கிறது.

ஷெட்டி, டெல்லி, ஹைதராபாத், வாராங்கல், மெஹபூப்நகர், சதாசிவ்பேத் ஆகிய இடங்களில் தலா ஒன்று என ஐந்து விற்பனை நிலையங்களைத் திறந்துள்ளார், அங்கு அவர் தினை சார்ந்த பொருட்களை விற்பனை செய்கிறார்.

ஷெட்டி, 1 லட்சம் விவசாயிகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும், 200 பேருக்கு வேலை வழங்க விரும்புவதாகவும் கூறுகிறார்.

இந்தத் தினை மனிதனின் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவர் 2017 இல் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் சிறந்த விவசாயி விருது, 2017 இல் இந்திய தினை ஆராய்ச்சி நிறுவனம் (IIMR) ஹைதராபாத் வழங்கும் சிறந்த தினை மிஷாரய்யா விருது மற்றும் விவசாயத்தின் சிறந்த புதுமையான விவசாயி விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

தினைகள் கடினமான மற்றும் வறட்சியைத் தாங்கும் தானியங்கள் ஆகும். அவற்றுக்கு சிறிதளவு நீர், உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் தேவைப்படுவதால் எளிதில் வளரக்கூடியவை. அவை சத்தானவை. புரதம், வைட்டமின்கள், இரும்பு, துத்தநாகம், கால்சியம் போன்ற தாதுக்கள் நிறைந்தவை.

இந்தியாவின் முன்முயற்சியின் பேரில், ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவித்து, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும், குறிப்பாக ஏழை நாடுகளில், தினை உற்பத்தியைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலக அளவில் தினை உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது, உலக உற்பத்தியில் சுமார் 40 சதவீத பங்கை இந்தியா கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் உலகளவில் உற்பத்தி செய்யப்பட்ட 304.8 லட்சம் டன்களில் சுமார் 120 லட்சம் டன் தினைகளை இந்தியா உற்பத்தி செய்துள்ளது என்று உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது. தினை உற்பத்தி செய்யும் முதல் ஐந்து மாநிலங்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம். அரசு டேட்டாப்படி, 2021-22 ஆம் ஆண்டில் 64.28 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான தினைகளை ஏற்றுமதி செய்து, உலகின் முதல் ஐந்து தினை ஏற்றுமதியாளர்களில் இந்தியாவும் உள்ளது.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *