உலகின் பிஸியான ஏர்போர்ட் துபாய்! அதிகம் பயணித்தது இந்தியர்கள்! கொரோனா காலத்திற்கு முந்தைய அளவு “டச்”
துபாய்: கொரோனா பெருந்தொற்று காலத்தில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட துறைகளில் சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து துறைகள் முக்கியமானவை. ஆனால் அதில் இருந்து மீண்டு வந்து, உலகிலேயே அதிகளவிலான பயணிகளையும் விமானங்களையும் கையாண்ட விமான நிலையம் என்ற பெருமையை தக்க வைத்துள்ளது துபாய் சர்வதேச விமான நிலையம்.
துபாய் சர்வதேச விமான நிலையம் கடந்த 2023 ஆம் ஆண்டில் 86.9 மில்லியன் பயணிகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. பயணிகள் போக்குவரத்து 31.7% அதிகரித்து உலகின் பிஸியான ஏர்போர்ட் என்ற பெருமையை பெற்றுள்ளது.
கொரோனா தொற்றுக்கு முன்பு 2018ஆம் ஆண்டு 89.1 மில்லியன் பயணிகள் வந்து சென்றதன் மூலம் பிஸியான விமான நிலையம் என பெயர் பெற்ற துபாய் சர்வதேச விமான நிலையம் கொரோனாவுக்கு பிறகு மீண்டெழுந்து மீண்டும் அந்த இடத்தை தக்க வைத்துள்ளது.
2023ஆம் ஆண்டில் துபாய் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்திய பயணிகளில் பெரும்பாலானவர்கள் இந்தியாவிற்கே பயணித்துள்ளனர். அதாவது 11.9 மில்லியன் பயணிகள் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளனர். அதே போல சவுதி அரேபியா, பாகிஸ்தான், பிரிட்டன் , ரஷ்யா நாடுகளும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் காரணமாக பெரும்பாலான ரஷ்யர்களின் விருப்பமான புகலிடமான துபாய் மாறி இருப்பது தெரிய வந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பின், சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்பட்ட நகரங்களில் துபாயும் ஒன்று. இதனால் அந்நாட்டு சுற்றுலா துறையும் , விமான போக்குவரத்து துறையும் பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியில் இருந்து வெகுவாக மீண்டுள்ளன. அண்மையில் துபாய் அரசு வெளியிட்ட சுற்றுலா சார்ந்த புள்ளி விவரங்களின் படி, 2023 ஆம் ஆண்டில் 17.15 மில்லியன் சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர், எனவே நடப்பாண்டிலும் இது நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டில் துபாய் சர்வதேச விமான நிலையம் 88.8 மில்லியன் பயணிகளை கையாளும் என கணிக்கப்பட்டுள்ளது. புர்ஜ் கலிபா போன்ற சுற்றுலா தலங்கள் மற்றும் வேலை நிமித்தமாக இந்தியா போன்ற நாடுகளில் இருந்து மக்கள் வருகை தருவது ஆகிய காரணங்களால் துபாய் பெரும்பாலானவர்களுக்கு விருப்பமான இடமாக உள்ளது. இதுவே 2023ஆம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காரணமாக இருந்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய 2019ஆம் ஆண்டை விட 2023இல் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையம் 104 நாடுகளில் உள்ள 262 இடங்களுக்கு 100 விமான நிறுவனங்கள் மூலம் போக்குவரத்து இணைப்பை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.