மேப் போட போனபோது..மும்பை கடலில்..திடீரென இந்திய ரஷ்ய குழுவினர் கண்டுபிடித்த”எண்ணெய் வயல்!” வயசு 50!
மும்பை: 1974ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சோவியத் யூனியனை சேர்ந்த குழுவினரால் மும்பைக்கு அருகே மேற்கு கடற்கரை பகுதியில் கண்டறியப்பட்டது தான் மும்பை எண்ணெய் வயல். இது கண்டுபிடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்னமும் இந்தியாவிற்கு தேவையான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை அள்ளித்தரும் முக்கிய ஆதாரமாக இதுதான் திகழ்கிறது.
மும்பை ஹைபீஃல்டு (முன்னர் பம்பாய் ஹைஃபீல்டு என்று அழைக்கப்பட்டது) இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் அரபிக் கடலில் அமைந்துள்ளது.
1974 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய மற்றும் சோவியத் குழுவினர் அகாடமிக் அர்கன்ஜெல்ஸ்கை என்ற நில அதிர்வு ஆய்வு கப்பலில் , காம்பே வளைகுடாவை வரைபடமாக்க சென்றனர். அப்போது அவர்களால் கண்டறியப்பட்டது தான் மும்பை உயர் நிலப்பரப்பு என அழைக்கப்படும் புகழ்பெற்ற எண்ணெய் வயல்.
இதன் வளத்தை அறிந்த மத்திய அரசு இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகமான (ONGC) மூலம், இங்கே எண்ணெய் வயலை அமைத்தது. உலக எண்ணெய் வரைபடத்தில் இந்தியாவிற்கு முக்கியமான இடத்தை தேடி தந்தது மும்பை எண்ணெய் வயல்.
1976ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி இந்த வயலில் எண்ணெய் உற்பத்தி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 3 ஆயிரத்து 500 பேரல்கள் எண்ணெய் உற்பத்தி செய்தது. மூன்று ஆண்டுகளுக்குள் அது 80,000 பேரல்கள் என்ற அளவை எட்டியது. டேங்கர்களில் மட்டுமே எண்ணெய் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 1978 ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எண்ணெய் எடுத்துச் செல்ல, முதன்முறையாக கடலுக்கு அடியில் குழாய் அமைக்கப்பட்டது.
கடந்த 1989ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 4.76 லட்சம் பேரல்கள் எண்ணெய் மற்றும் 28 பில்லியன் கன மீட்டர் எரிவாயு என இங்கே உற்பத்தி தனது உச்சத்தை எட்டியது. தற்போது ஒரு நாளைக்கு 1.35 லட்சம் பேரல்கள் எண்ணெய் மற்றும் 13 பில்லியன் கன மீட்டர் எரிவாயு இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
மும்பை எண்ணெய் வயலின் பொன்விழா கொண்டாட்டம் மும்பையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ,கடந்த 50 ஆண்டுகளில் ஓஎன்ஜிசி மும்பை எண்ணெய் வயலில் 527 மில்லியன் பேரல்கள் எண்ணெய் மற்றும் 221 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை உற்பத்தி செய்துள்ளது, இது இந்தியாவின் முழு நாட்டு உற்பத்தியில் 70% ஆகும் என பெருமிதம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மும்பை எண்ணெய் வயலின் 50 ஆண்டு கால வரலாறு பிரமிக்கத்தக்கது என்றார். வருங்கால எண்ணெய் வள ஆய்வுகளுக்கு மும்பை எண்ணெய் வயலின் பங்கு மகத்தானது என கூறிய அவர், ஓஎன்ஜிசி வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகியவற்றை பயன்படுத்து சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைத்து நிலையான நீடித்த எண்ணெய் உற்பத்தி வாய்ப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.