பாகிஸ்தானில் “சானியா மிர்சா”.. கோபத்தின் உச்சிக்கே போன 3வது மனைவி சனா ஜாவேத்.. என்ன நடந்தது?
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் நடிகை சனா ஜாவேத். அவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர் தான். சானியா மிர்சா உடனான 13 ஆண்டு திருமண வாழ்வை முறித்துக் கொண்டு சனா ஜாவேத்தை மணந்து கொண்டார் சோயப் மாலிக்.
சானியா மிர்சா தாமாக முன்வந்து, சோயப் மாலிக்கை விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது. இனி அவர்கள் வாழ்வில் எந்த சிக்கலும் இல்லை என்றாலும், பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் சனா ஜாவேத்தை சீண்டி இருக்கின்றனர். பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இடையே “சானியா மிர்சா” என்ற கோஷம் எழுந்தது.
தன் கணவர் சோயப் மாலிக், கராச்சி கிங்ஸ் அணிக்காக ஆடுவதை நேரில் காண வந்திருந்தார் சனா ஜாவேத். அவரை கிண்டல் செய்யும் நோக்கத்தில் சில ரசிகர்கள் சானியா மிர்சா என கோஷம் எழுப்பத் துவங்கினர். முதலில் அதை கண்டு கொள்ளாமல் இருக்க முயற்சி செய்தார் சனா ஜாவேத். ஆனால், அந்த ரசிகர்கள் வேண்டுமென்றே அவரது கோபத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும், மீண்டும் சானியா மிர்சா என சனா ஜாவேத்தை பார்த்து கூச்சலிட்டனர்.
அதனால் பொறுமை இழந்த சனா ஜாவேத் கோபத்துடன் அந்த ரசிகர்களை பார்த்தார். அந்த ரசிகர்கள் அதை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள். அது பாகிஸ்தான் நாட்டில் வேகமாக பரவி அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக மாறி உள்ளது. சோயப் மாலிக் உடன் திருமண உறவை முறித்துக் கொண்டாலும் பாகிஸ்தானில் சானியா மிர்சாவின் பெயர் தொடர்ந்து பேசுபொருளாக மாறி உள்ளது.
சோயப் மாலிக் உலகின் பல்வேறு டி20 தொடர்களிலும் பங்கேற்று வருகிறார். தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் அவர் பங்கேற்று இருக்கிறார். சனா ஜாவேத் தான் ஆடும் போட்டியை காண நேரில் வந்த நிலையில், சோயப் மாலிக் 35 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அரைசதம் அடித்தார். எனினும், அவரது அணியான கராச்சி கிங்ஸ் 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.