நிமிடங்களில் ரெடியாகும் வாழைப்பூ சட்னி… ருசியாக செய்வது எப்படி?
ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். மேலும் இது வயிற்றுப்புண்கள், செரிமான பிரச்சனை, வாய்ப்புண், வாய் துர்நாற்றம் ஆகியவற்றிற்கும் நல்ல தீர்வை தரும்.
முக்கியமா பெண்களுக்கு வாழைப்பூ பெரும் வரப்பிரசாதம் என்றேச் சொல்லலாம். ஏனென்றால் இது கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது. மேலும் மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும் போது இதன் சாறை பருகினால் ரத்தப்போக்கு கட்டுப்படும்.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய இந்த வாழைப்பூவை வைத்து பொரியல், வடை, சூப் என்று தயாரித்து சாப்பிட்டிருக்கிறோம். ஆனால் இப்போது நாம் பார்க்கப்போவது வாழைப்பூ வைத்து சத்தான அதேசமயம் சுவையான ‘வாழைப்பூ சட்னி’ எப்படி செய்யலாம் என்றுதான்… வாங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ – 2 கப்
பெரிய வெங்காயம் – 1
புளி – நெல்லிக்காய் அளவு
மோர் – தேவைக்கேற்ப
கடுகு – ¼ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 4 டீஸ்பூன்
காய்ந்த சிகப்பு மிளகாய் – 5
பெருங்காயம் – 1 சிட்டிகை
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர்- தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் வாழைப்பூவில் உள்ள நரம்பை நீக்கி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி அதை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வாழைப்பூவின் நிறம் மாறியவுடன் அதை ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.
அடுத்து அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து பிறகு அதனுடன் கடுகு சேர்த்து கொள்ளுங்கள்.
உளுத்தம் பருப்பு நன்றாக சிவந்த உடன் எடுத்து வைத்துள்ள புளி மற்றும் காய்ந்த சிகப்பு மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு அதனுடன் பெருங்காய தூள் சேர்த்து கலந்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
வெங்காயம் நன்றாக கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் அடுப்பை அணைத்து அவற்றை ஆற வைத்து கொள்ளுங்கள்.
வதக்கி வைத்துள்ள அனைத்தும் நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்தால் சுவையான வாழைப்பூ சட்னி ரெடி…
இதை நீங்கள் தயிர் சாதம், இட்லி, தோசை மற்றும் வெள்ளை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் ருசி அள்ளும்.