கொய்யா பழத்தை எப்போது சாப்பிட்டால் முழு சத்தும் கிடைக்கும் தெரியுமா? சரியான டைம் இதுதான்!

நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் பழங்களில் கொய்யா மிகவும் முக்கியமானது. கொய்யாவின் சிறப்பு என்னவென்றால் இதனை காயாக இருக்கும் போதும் சுவைத்து சாப்பிடலாம், பழமாக இருக்கும் போதும் சுவைத்து சாப்பிடலாம்.

கொய்யாவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. எனவே இது பல வகையான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மலச்சிக்கல், சர்க்கரை நோய் பிரச்சனை போன்ற பல சிக்கல்களுக்கு கொய்யா அருமருந்தாக இருக்கிறது. தவிர சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் கூட கொய்யா பல நன்மைகளை செய்கிறது. இதன் சுவையும் அருமையாக இருக்கும் மற்றும் மலிவு விலையில் எல்லா சீசன்களிலும் கிடைக்கும் பழம் என்பதால் பலரும் கொய்யாவை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

பல பழங்களை போலவே கொய்யாவையும் நாம் நினைத்த போதெல்லாம் சாப்பிடுவோம். ஆனால் அப்படி சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதனை சாப்பிடும் நேரத்தைப் பொறுத்து கொய்யாவின் மதிப்பு மாறுபடும் என்பது உங்களுக்கு தெரியுமா.!! ஆம் கொய்யாப்பழத்தை காலை நேரத்தில் சாப்பிட்டால் தங்கத்துக்கும், மதிய நேரத்தில் சாப்பிட்டால் வெள்ளிக்கும், இரவு நேரத்தில் சாப்பிட்டால் வெண்கலத்துக்கும் சமம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே கொய்யா பழங்களை காலை நேரத்தில் சாப்பிட வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

காலை நேரத்தில் கொய்யா சாப்பிடுவது அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் நம் உடல் முற்றிலும் பயன்படுத்தி கொள்ள உதவுகிறது. இதனால் கொய்யாவால் கிடைக்கும் பெரும்பாலான ஆரோக்கிய நன்மைகளை நம்மால் பெற்று கொள்ள முடியும். எனவே கொய்யா எடுத்து கொள்ள மற்ற நேரத்தை விட காலை நேரமே சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள்.

கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகள் இங்கே:

கொய்யாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நம்முடைய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கொய்யா எடுத்து வந்தால் அவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

கொய்யாவில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கிறது. கொய்யா சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த பிரச்சனைகள் சரியாக நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது. எனவே உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கொய்யா சாப்பிடலாம்.

கொய்யாவில் காணப்படும் போதுமான அளவு பொட்டாசியம் மற்றும் நிறைந்திருக்கும் நார்ச்சத்து உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாவை தொடர்ந்து தங்கள் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.

கொய்யாவில் காணப்படும் வைட்டமின்-பி3 மற்றும் வைட்டமின்-பி6 ஆகியவை மூளை வளர்ச்சி மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *