நீங்க போற இடமெல்லாம் கூகுள் மேப்பிற்கு தெரியுதா..? இனி அந்த கவலை இல்லை..இந்த விஷயத்தை தெரிஞ்சுகோங்க..!
கூகுள் நிறுவனத்தின் கீழ் இருக்கும் தளங்களில் மேப்ஸ் ஒரு முதன்மைப் பயன்பாடாக திகழ்கிறது. கூகுள் மேப்ஸ் 2005ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும். உலகளவில் பல கோடி பயனர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். அது பல விதத்தில் யூசர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. வழி தெரியவில்லை என்றால் ‘கூகுள் கிட்ட கேளுங்க’ என்று சொல்லும் அளவுக்கு மேப்ஸ் தளத்தின் பல மேம்படுத்தல்களை கண்டுள்ளது.
பைக், கார் அல்லது நடந்து செல்லும் குறுகிய பாதைகளை மேப்ஸ் எளிதாக யூசர்களுக்கு காட்சிப்படுத்தும். மேலும் இடங்களின் 360 டிகிரி படங்களையும் நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மட்டும் இதுவரை 10 பில்லியனுக்கும் அதிகமான யூசர்கள் மேப்ஸ் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் மேப்ஸ் பல யூசர்களுக்கு நம்பமுடியாத பயனுள்ள பயன்பாடாக இருந்தாலும், அதன் குறிப்பிட்ட அம்சங்கள் தனியுரிமை மற்றும் முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதால் யூசர் தரவு பாதுகாப்பு குறித்து கவலைகள் நிலவுகின்றன.
நீங்கள் செல்லும் பாதைகள், நீங்கள் செல்லும் இடங்கள், அங்கு நீங்கள் செலவிடும் நேரம் மற்றும் நீங்கள் பயணிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பது உள்பட நீங்கள் இருக்கும் இடத்தைக் குறித்த சிறிய விவரங்களை கூட வேறொருவர் எப்போதும் அறிந்திருப்பதை கற்பனை செய்து பார்த்தால் பயமாக இருக்கும்.
இதே பிரச்னைதான் கூகுள் மேப்ஸ் செயலியிடமும் பயனர்களுக்கு இருந்து வருகிறது. எனவே, இந்த கவலையைப் போக்க கூகுள் பிரைவேட் அணுகலை கூகுள் மேப்ஸ் செயலியில் யூசர்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் யூசர்கள் தங்கள் தரவுகளை சேமிக்காமல் மேப்ஸ் சேவைகளைப் பயன்படுத்தலாம்.
ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் மேப்ஸிற்கான பிரைவேட் மோடைப் பயன்படுத்துவது எப்படி?
– உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியை பதிவிறக்கம் செய்து திறக்கவும்
– உங்கள் கூகுள் கணக்கை அணுக திரையின் மேல் வலது மூலையில் உள்ள சுயவிவர ஐகானை கிளிக் செய்யவும்
– அதில் இருக்கும் பிரைவேட் மோடு ஆப்ஷனைக் கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யவும்
தற்போது ஆப்பிள் iOS ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட்டுகளில் கூகுள் மேப்ஸ் பிரைவேட் மோடு ஆப்ஷனை எப்படி அணுகுவது என்றுப் பார்க்கலாம்.
– உங்கள் ஐபோன் அல்லது ஐபேட்- இல் கூகுள் மேப்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்துத் திறக்கவும்.
– திரையின் மேல் வலது மூலையில், உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
– தொடர்ந்து பிரைவேட் மோடு ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
இந்த பிரைவேட் மோடில் சாதாரண கூகுள் மேப்ஸில் பயன்படுத்தக் கிடைக்காத சில அம்சங்கள் உள்ளன. பயணம், பின்தொடர்தல், இருப்பிட வரலாறு, இருப்பிடப் பகிர்வு, அறிவிப்புகள் மற்றும் செய்திகள், தேடல் வரலாறு, தேடல் நிறைவு பரிந்துரைகள், வழிசெலுத்தலில் கூகுள் அசிஸ்டண்ட்டின் மைக்ரோஃபோன் அணுகல் ஆகியவை தடுக்கப்படும்.