உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் காலமானார்..!
சட்ட நிபுணரும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் (95) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.
நாரிமன் மும்பை உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். 22 ஆண்டுகள் பயிற்சி செய்த பிறகு, அவர் 1971இல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஃபாலி நாரிமனுக்கு 1991-ல் பத்ம பூஷன் மற்றும் 2007-ல் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன.
இவர் நாடாளுமன்ற நியமன உறுப்பினராகவும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல் சாசன வழக்கறிஞர்களில் ஒருவராகவும் அறியப்பட்டவர். இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக 19 ஆண்டுகள் இருந்தார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்ட ஃபாலி நாரிமன் 1950ம் ஆண்டு மும்பை அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார். வழக்கறிஞர்கள் தேர்வில் முதலிடம் பெற்றதற்காக தங்கப்பதக்கமும், பரிசும் பெற்றார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது இவரது வாதத் திறமையால் தான் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக இவர் வாதிட்டார். ஆனாலும் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு கிடைத்தது. இவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாரிமன் மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், புகழ்பெற்ற சட்ட வல்லுநர், மூத்த வழக்கறிஞர் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் சிவில் உரிமைகளின் தீவிர வாக்காளருமான ஃபாலி எஸ் நாரிமன் அவர்களின் மறைவு சட்ட அமைப்புக்கு மிகப்பெரிய இழப்பாகும். பத்ம விபூஷன் பெற்றவர், அவரது கொள்கைகளில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உறுதியானதாகவும் போற்றத்தக்கதாகவும் இருந்தது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தனது எக்ஸ் பக்கத்தில், ஃபாலி நாரிமனின் மறைவு சட்டச் சமூகத்தில் ஒரு ஆழமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பங்களிப்புகள் நமது அரசியலமைப்பு மற்றும் சிவில் உரிமைகளின் புனிதத்தன்மையை நிலைநிறுத்துவதற்கு பல தலைமுறை சட்ட வல்லுநர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. அவர் இல்லாவிட்டாலும் நீதி மற்றும் நியாயத்திற்கான அவரது அர்ப்பணிப்பு நம்மை வழிநடத்தட்டும் என குறிப்பிட்டுள்ளார்.