“தளபதி 68 படத்தின் கதை எனக்கு தெரியாது” – உண்மையை உடைத்த நடிகர் வைபவ்!
2007 ல் தனது தந்தை இயக்கத்தில், தெலுங்கில் நாயகனாக அறிமுகமான நடிகர் வைபவ், 2008 ல் வெங்கட்பிரபுவின் சரோஜா படத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பிறகு வெங்கட்பிரபுவின் கோவா, மங்காத்தா படங்களில் முக்கியமான வேடமேற்றார். பிரியாணியில் அவருக்கான கதாபாத்திரம் இல்லாத போதும், சின்ன வேடத்தில் வந்து போனார். தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் 68 வது படம் G.O.A.T. ல் நடித்து வருகிறார்.
வைபவின் 25 வது படமாக ‘ரணம் – அறம் தவறேல்’ தயாராகியுள்ளது. இதில் அவர் நாயகனாகவும், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா நாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஷெரீஃப் என்ற அறிமுக இயக்குநர் இந்த படத்தை எழுதி, இயக்கியுள்ளார். இசை அரோல் கரோலி. மது நாகராஜ் ரணம் – அறம் தவறேல் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தபடத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
படத்தை வெளியிடும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசுகையில், “வெளிநாட்டில் வேலை செய்து செட்டிலாகிவிட்டு, தன் கனவைத் துரத்தி, தன் ஆசையை நோக்கி வந்து தமிழ்நாட்டில் ரணம் அறம் தவறேல் படம் எடுத்திருக்கிறார். அதையும் மூன்று நான்கு வேலைகளில் ஒன்றாகக் கருதாமல், அதற்கென்று பிரத்யேகமான கவனம் கொடுத்து அர்ப்பணிப்புடன் அதை உருவாக்கி இருக்கிறார் மது நாகராஜன். இது சாதாரண விஷயம் இல்லை” என்றார்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா பேசுகையில், “ரணம் படத்தை நானும் ஷெரீஃப்-ம் கோவிட் காலத்தில் தான் துவங்கினோம். இரவு பகலாக அமர்ந்து விவாதித்து நாங்கள் இந்தக் கதையை உருவாக்கினோம். அடுத்து இப்படத்தை யார் தயாரிப்பார்கள் என்கின்ற சந்தேகம் எங்களுக்கு வந்தது. ஏனென்றால் இக்கதையை அவ்வளவு எளிதாக யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இக்கதையில் இருக்கும் ஒரு ப்ளாஷ்பேக் போர்ஷனைப் பார்த்து எல்லோருமே தயங்கினார்கள். மேலும் பல ஹீரோக்களும் கூட அதே காரணத்தினால் இப்படத்தில் நடிக்கத் தயங்கினார்கள்” என்றார்.
இசையமைப்பாளர் அரோல் கரோலி பேசுகையில், “எல்லோரும் பேசியது போல் ரணம் எனக்கும் முக்கியமான படம், அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். படம் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்” என உறுதியளித்தார். இயக்குநர் ஷெரீஃப் பேசுகையில், “டிரைலர் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். நானும் பாலாஜியும் தான் இப்படத்தைத் துவங்கினோம். வேறொரு படத்தைத் துவங்கலாம் என்று நினைத்த போது லாக்-டவுன் துவங்கியது. புராஜெக்ட்டும் முடிந்து போனது. வாழ்க்கையில் அடி மேல் அடி. அப்படி இருக்கும் போது ஒரு செய்தி கண்ணில்பட்டது.
இது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும் என்கின்ற எண்ணத்தில் இக்கதையைப் பேசலாம் என்று முடிவு செய்து ஆத்திச்சூடியில் இருக்கும் அரனை மறவேல் என்கின்ற வரிகளை டைட்டிலாக வைத்தோம். கருத்து சொல்வது போல் இல்லாமல் நேர்மையாக ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று விரும்பினோம். நமக்கு மெச்சூரிட்டி வந்த பின்னர் வாழ்க்கையில் வாழ்ந்து முடிக்கும் முன்னர் கண்டிப்பாக அறம் தர்மம் செய்வதற்கு ஒரு வாய்ப்பு வரும். அந்த அறம், தர்மம் என்பது தானம் மட்டுமல்ல. உண்மைக்காகக் குரல் கொடுப்பது. அநியாயத்தை எதிர்ப்பது. இது எல்லாமே தர்மம் மற்றும் அறம்தான். அதை நாம் யோசிக்காமல் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தியே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
ரணம் படத்தைவிட வைபவ் நடித்து வரும் தளபதி 68 (G.O.A.T.) படத்தின் அப்டேட்டில்தான் அனைவரும் ஆர்வமாக இருந்தனர். அதனை தனது பேச்சில் வைபவ் தொட்டுச் சென்றார். “தளபதி 68 படத்தின் கதை எனக்கு என்னவென்று தெரியாது. ஏனென்றால் வெங்கட் பிரபு சரோஜா காலத்தில் இருந்தே எனக்குக் கதை சொல்லியது கிடையாது. ரஜினி சாருடனும் நடிக்க வாய்ப்பு அமைந்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும். எனக்கு எப்போதும் வரவேற்பு கொடுத்து வரும் நீங்கள் இப்படத்திற்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.