மாசி மகம் 2024 : எந்த கடவுளை வழிபட வேண்டும்..? குலதெய்வத்தை வழிபடலாமா..??
சிவனுக்கு சிவராத்திரி.. முருகனுக்கு பங்குனி உத்திரம், தைப்பூசம்… அம்மனுக்கு நவராத்திரி… விஷ்ணுவுக்கு ஏக தாசி என்பது போல மாசி மகம் அன்று எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்று உங்கள் மனதில் கேள்வி எழும். இதனால் பலருக்கு மாசி மகத்தின் பலன்கள் குறித்து தெரியாமலே இருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு மாசி மகம் பிப்ரவரி 24ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. எனவே இந்நாளில் எந்தெந்த தெய்வத்தை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை குறித்து இங்கு நாம் பார்க்கலாம்.
மாசி மகம் புனித நீராடல்!
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகம் வருவதால் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் மாசி மாதம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்நாளில் கும்பகோணம் மகாமகம் குளத்தில் நீராடினால் ஏழு ஜென்ம பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.
ஒருவேளை உங்களால் அங்கு சென்று நீராட முடியவில்லை என்றால் வீட்டு அருகில் இருக்கும் நீர் நிலைகளில் நீராடி மனதார வேண்டினால் பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் அந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் பித்ரு சாபம் நீங்கி ஏழு தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.
அம்மன் வழிபாடு: மாசி மாதம் மகா நட்சத்திரத்தில் தான் உமா தேவியார் தட்சனின் மகள் தாட்சியாக அவதரித்தார் என்று புராணம் கூறுகிறது. எனவே, அந்நாள் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் பெண்கள் விரதம் இருந்து வழிபட்டால் சக்தி அருளைப் பெறலாம்.
முருகன் வழிபாடு: சிவனுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாள் மாசி மகம் என்பதால் அந்நாள் முருகனை வழிபடுவதற்கும் சிறப்பான நாள் ஆகும். எனவே இந்நாளில் முருகனை வழிபட்டு அருளைப் பெறுங்கள்.
சிவன் வழிபாடு: சிவன் வருணனுக்கு சாப விமோசனம் அளித்த நாள் மாசி மகம்தான் என்று புராணம் கூறுகிறது. எனவே, மாசி மகம் அன்று சிவனை வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும்.
பெருமாள் வழிபாடு: மாசி மகம் அன்று தான் பெருமாள் பாதாளத்தின் உள்ளிருந்து பூமியை வராக அவதாரம் எடுத்து வெளியே கொண்டு வந்தார். எனவே, இந்நாள் பெருமாளை வணங்க உகந்த நாளாகும்.
குலதெய்வ வழிபாடு: குலத்தை தளைக்க செய்வது குலதெய்வ வழிபாடு ஆகும். எனவே மாசி மகம் அன்று குலதெய்வத்தை வழிபட்டால் ஏராளமான பலன்கள் கிடைக்கும். மாசி மகம் எல்லா தெய்வங்களையும் வழிபட உகந்த நாளாகும். மேலும், தோஷம் தீர்க்கும் புண்ணிய நாளாகவும் கருதப்படுகிறது.