சன்ரைசர்ஸ் டீமில் விரிசல்? ஒரே ஓவரில் 5 சிக்ஸ் அடித்த வீரரை திட்டிய பேட்டிங் கோச் ஹேமங் பதானி
2024 ஐபிஎல் தொடர் துவங்கும் முன்பே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விரிசல் விழுந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹேமங் பதானி, அந்த அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ரஞ்சி கோப்பை ஆட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்.
இந்தியாவில் உள்ள சிறந்த டி20 பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கிறார் அபிஷேக் சர்மா. இளம் வயது தான் என்றாலும் டி20 போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடுவதில் சிறந்து விளங்குகிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் மற்றும் சிக்ஸர் அடிக்கும் திறன் ஆகியவற்றால் கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார்.
தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி ட்ராபி போட்டியில் அவர் பஞ்சாப் அணி சார்பில் பங்கேற்று ஆடி வருகிறார். தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் சாய் கிஷோர் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 5 சிக்ஸ் அடித்தார் அபிஷேக் சர்மா. ஆனால், 16 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் உள்ளூர் டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 5 சிக்ஸ் அடித்து சாதனை செய்ததை பலரும் பாராட்டிய நிலையில், அவர் இடம் பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹேமங் பதானி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடி 36 ரன்களில் ஆட்டமிழந்து இருக்கிறார் என தனது விமர்சனத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஹேமங் பதானி வெளியிட்ட ட்வீட் : “4 நாள் போட்டியில் 36 ரன்களில் ஆட்டமிழந்து விட்டார். அவரது அணியும் தோல்வி அடைந்து விட்டது. அவர்கள் போட்டியை காப்பாற்ற (டிரா செய்ய) முயற்சி செய்தார்கள். ஒருவர் அணியின் சூழ்நிலை மற்றும் என்ன மாதிரியான போட்டியில் ஆடுகிறோம் என்பதை உணர்ந்து ஆட வேண்டும்”
உங்கள் அணி வீரரையே இப்படி பொதுவெளியில் விமர்சனம் செய்கிறீர்களே என இது குறித்து சில ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் ஹேமங் பதானி அதற்கு, தான் கடந்த ஆண்டு வரை தான் சன்ரைசர்ஸ் அணியில் இருந்தேன். அது அப்படியே இருக்கட்டும் என பதில் கூறி இருக்கிறார்.