2008 ஐபிஎல் ஏலத்தில் நான் போட்ட திட்டம்.. சிஎஸ்கே அணிக்கு வந்தது இப்படித்தான்.. தோனி ஓபன் டாக்
2008 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை எப்படி வாங்கியது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வலம் வருகின்றன. ஆனால், முதன்முறையாக தோனி இது குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தோனி இது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
2008இல் ஐபிஎல் தொடர் முதன்முதலில் துவங்கப்பட்ட போது முதல் ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களை நேரடியாக நட்சத்திர வீரராக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என ஒரு விதி இருந்தது. அதன்படி சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங் போன்ற வீரர்களை அப்போது ஐபிஎல் அணிகள் நேரடியாக சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தன.
மேலும், ஏலத்தில் அந்த நட்சத்திர வீரர்களை விட அதிக சம்பளத்துக்கு வேறு வீரர்களை வாங்கினால், அவர்களை காட்டிலும் நட்சத்திர வீரர்களுக்கு 15 சதவீதம் அதிக சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்ற விதியும் இருந்தது. அதனால், முன்னணி வீரர்கள் ஏலத்தை விட நேரடியாக ஒப்பந்தம் செய்வதே லாபகரமான முறை எனக் கருதி அதற்கு ஒப்புக் கொண்டனர்.
ஆனால், அப்போது டி20 அணியின் கேப்டனாக இருந்த தோனியை ஒரு அணி பத்து லட்சம் அமெரிக்க டாலருக்கு (அன்றைய மதிப்பில் 4 கோடி) ஒப்பந்தம் செய்ய முன்வந்தது. அன்றைக்கு மற்ற நட்சத்திர வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தை ஒட்டியே இந்த தொகையை அவருக்கு கொடுக்க முன் வந்தது அந்த அணி. ஆனால், ஏலத்தில் நட்சத்திர வீரர்கள் இல்லாத அணிகள் தன்னை வாங்க போட்டி போடும் என சரியாக கணித்த தோனி நேரடியாக ஏலத்துக்கு தன் பெயரை கொடுத்தார். அதன் காரணமாகவே அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 6 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.
இது பற்றி தோனி கூறுகையில், “ஆரம்பத்தில் ஐந்து நட்சத்திர வீரர்கள் அறிவிக்கப்பட்டபோது,ஒரு குறிப்பிட்ட உரிமையாளர் நட்சத்திர வீரராக ஆவதற்கு என்னையும் அணுகினர். நான் விரைவாக முடிவை எடுக்க வேண்டியிருந்தது. 2007 டி20 உலகக் கோப்பை வென்ற அணியின் கேப்டன் என்பதால் எளிதாக 1 மில்லியன் டாலர் வரை எனக்கு கிடைக்கும் என நினைத்தேன். அதனால் ரிஸ்க் எடுப்போம், ஏலத்தில் நுழைவோம். நட்சத்திர வீரர்களை ஒப்பந்தம் செய்யாத மூன்று அணிகளில் இரண்டு அணிகள் மற்ற உரிமையாளர்களுடன் சேர்ந்து என்னை வாங்க ஆர்வம் காட்டினால், அது விலையை அதிகரிக்கும் என்று நினைத்தேன்”
“நீங்கள் ஒரு நட்சத்திர வீரராக மாறினால், ஏலத்தில் அதிக தொகைக்கு ஒரு வீரரை வாங்கினால், அந்த நட்சத்திர வீரருக்கு 10 அல்லது 15 சதவிகிதம் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று ஐபிஎல் உரிமையாளர் நினைப்பார். அதனால் நான் எனக்காக, இந்த நேரத்தில் நினைத்தேன். சரியான நேரத்தில், ஏலத்தில் நுழைவது நல்லது – நட்சத்திர வீரர் இல்லாத எந்த உரிமையாளரும் என்னை வாங்கினால், எனக்கு அதிக பணம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். ஏலம் நடந்தபோது, சிஎஸ்கே என்னை வாங்கியபோது,நான் 1.5 மில்லியன் டாலர்களுக்கு சென்றேன் (6 தோராயமாக கோடி). எனவே அந்த நேரத்தில் எனது யோசனை வேலை செய்தது.” என்றார் தோனி.