இதுதான் டாடா கம்பெனி.. இனி தைவானை நம்பியிருக்க வேண்டாம்? இந்தியாவில் வருது பிரமாண்ட சிப் தொழிற்சாலை

மும்பை: சர்வதேச அளவில் மொபைல் போன், லேப்டாப் மற்றும் கணினிகளில் பயன்படுத்தப்படும் சிப்களுக்கு பெரிய அளவிலான தேவை இருக்கிறது. தற்போது உலகில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான சிப்கள் தைவான் நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா தற்போது சிப்கள் தயாரிக்கும் துறையிலும் களமிறங்க உள்ளது.

டாடா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யம் ஆகும். இவர்கள் கால்பதிக்காத துறையே இல்லை என்ற அளவுக்கு அனைத்து துறைகளிலும் ஒரு கை பார்க்கும் டாடா நிறுவனம் விரைவில் சிப்கள் தயாரிப்பிலும் ஈடுபட உள்ளது.குஜராத்தில் உள்ள தோலேரா பகுதியில் ஆலை அமைத்து செமி கண்டக்டர்களை உற்பத்தி செய்ய டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதற்காக டாடா குழுமம் தைவானை சேர்ந்த பவர்சிப் செமி கண்டக்டர் உற்பத்தி நிறுவனம் மற்றும் யுஎம்சி குழுமம் ஆகியவற்றுடன் இணைந்து செயலாற்றும் வகையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. அடுத்தடுத்த கட்டத்துக்கு பேச்சுவார்த்தை நகர்வதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. அப்படி சிப்கள் தயாரிக்கும் ஆலை நிறுவப்பட்டால் இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த தொழிலில் களமிறங்கும் மிகப்பெரிய தொழில் குழுமம் என்ற பெருமை டாடாவுக்கு கிடைக்கும்.

குஜராத் ஆலை அமைத்து முதல் கட்டமாக கிராஃபிக் பிராசசர் யூனிட்களான (GPU)க்கு தேவைப்படும் 65 நேனோமீட்டர் நோடுகளை தயாரிக்க டாடா முடிவு செய்துள்ளது. பின்னர் படிப்படியாக 48 நேனோமீட்டர் மற்றும் 28 நேனோமீட்டர் என விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பக் கட்டத்தில் ஒரு நாளைக்கு 700 முதல் 1,000 செமி கண்டக்டர் சிப்கள் தயாரிக்கும் வகையில் ஆலை நிறுவப்பட்டு பின்னர் அது படிப்படியாக பெரிதுபடுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.

அண்மையில் கூட டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன், செமி கண்டக்டர் ஆலை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை முடியும் தருவாயில் உள்ளது, 2024இல் அது செயல்பாட்டுக்கு வந்துவிடும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

டாடா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தைவானை சேர்ந்த யுஎம்சி நிறுவனம், உலகிலேயே செமி கண்டக்டர் உற்பத்தியில் இரண்டாமிடத்தில் உள்ளது. அதே போல பிஎஸ்எம்சி, அண்மையில் ஜப்பானில் 5.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் சிப் தயாரிக்கும் ஆலையை அமைத்தது. உலகளவில் மின்னணு சாதனங்கள் நவீனமடைந்து வருவது, ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் நுகர்வும், உற்பத்தியும் அதிகரித்து வருவதால் வருங்காலத்தில் சிப் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் டிமாண்ட் இருக்கும். அதை சரியாக கணித்து டாடா குழுமம் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *