PVR, INOX தியேட்டர்களில் டிக்கெட் விலை ரூ. 99 மட்டுமே! அறிவிக்கப்பட்டது ஆஃபர்.. மக்களே ரெடியா!
சென்னை: பிப்ரவரி மாதம் காதலுக்கான மாதம் என சும்மாவா சொல்லி வைத்தார்கள். பிப்ரவரி 14ஆம் தேதி எப்படி காதலர் தினம் கொண்டாடப்படுகிறதோ அப்படி பிப்ரவரி 23ஆம் தேதி சினிமா காதலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி சினிமாவை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்களுக்காகவே பிரபல திரையரங்கு நிறுவனமான PVR & INOX சூப்பரான ஒரு சலுகையை அறிவித்துள்ளது.
டிக்கெட் விலை ரூ.99 தான்: பிப்ரவரி 23ஆம் தேதி சினிமாவை காதலிப்பவர்களுக்கான தினம். இதனை முன்னிட்டு PVR & INOX சார்பாக வெள்ளிக்கிழமை அன்று (பிப்.23) இவர்களுக்கு சொந்தமான திரையரங்குகளில் படம் பார்ப்பதற்கான கட்டணத்தில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த புதுப் படங்களை வெறும் 99 ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்தி கண்டு ரசிக்கலாம் என PVR INOX நிறுவனம் கூறியுள்ளது.
ஹாலிவுட்டில் தொடங்கி அனைத்து மொழி படங்களையும் இந்த சலுகை கட்டணத்தில் காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 99 ரூபாய் டிக்கெட் கட்டணம் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களிலும் இருக்கும் PVR மற்றும் INOX திரையரங்குகளில், வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை புது ரிலீஸ்: சினிமா காதலர்களுக்கான தினமான வெள்ளிக்கிழமை அன்று, பல்வேறு புதிய திரைப்படங்களும் வெளியாக உள்ளன. ஆல் இந்தியா ரேங்க், ஆர்ட்டிக்கல் 370, கிராக், தேரி பாடோன் மெயின் அயிஷா உல்ஜா ஜியா மற்றும் ஃபைட்டர் ஆகிய இந்திய மொழி படங்களும், மேடம் வெப், தி ஹோல்டுஓவர்ஸ், பாப் மார்லி – ஒன் லவ், மீன் கேர்ல்ஸ், தி டீச்சர்ஸ் லவுஞ்ச் ஆகிய ஹாலிவுட் படங்களும் திரைக்கு வர இருக்கின்றன.
ரெக்லைனர் இருக்கைகள்: திரையரங்கில் வழக்கமான இருக்கைகளுக்கு 99 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ப்ரீமியம் மற்றும் ரெக்லைனர் இருக்கைகளுக்கு 199 ரூபாய் என டிக்கெட் சலுகை விலையில் கிடைக்கும். வழக்கமாக இவை 500 ரூபாய்க்கும் மேலே கூட இருக்க கூடியதாகும். IMAX, 4DX, MX4D ஆகியவற்றிலும் கட்டண சலுகையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் பார்க்கலாம்: தேசிய சினிமா நாள் கொண்டாட்டத்தில் கிடைத்த அனுபவத்தை அடுத்து சினிமா காதலர்களுக்கான தினத்தையும் கொண்டாட இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள PVR INOX லிமிடெட்டின் இணை தலைமை செயல் அதிகாரி கவுதம் தத்தா, தென் இந்திய மாநிலங்களை தவிர( கர்நாடகாவுக்கு மட்டும் விலக்கு) நாட்டின் பிற பகுதிகளில் உள்ள அனைத்து PVR INOX திரையரங்குகளிலும் இந்த சலுகை கிடைக்கும் என தெரிவித்துள்ளார். அதாவது சென்னை, கோவையில் பார்க்க முடியாதே தவிர பெங்களூரில் பார்க்கலாம். பிவிஆர் இந்த பாரபட்சத்தை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் சொல்வது புரிகிறது. யோசிக்குமா பிவிஆர்?
இதனிடையே, அனைத்து சினிமா ரசிகர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுக்கு பிடித்த படத்தை பெரிய திரையில் காணும் அனுபவத்தை பெற்று மகிழ வேண்டும் ,பிப்ரவரி 23ஆம் தேதிக்காக அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் வாழ்த்துகள் என கவுதம் தத்தா தெரிவித்துள்ளார். எந்த ரேட்டா இருந்தாலும் தமிழ்நாட்டில் படம் பார்ப்பார்கள், ஆந்திராவிலும் அப்படித்தான் என நினைத்துவிட்டது போலும் பிவிஆர்.