ஷாரூ கான் முதல் ஷாகித் கபூர் வரை.. WPL தொடக்க விழாவில் ஆட்டம் போடும் பாலிவுட் ஸ்டார்ஸ்.. முழு விவரம்
மகளிர் பிரீமியர் லீக் தொடக்க விழாவில் கலந்து கொள்ளவுள்ள பாலிவுட்டின் சினிமா நட்சத்திரங்கள் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான 2வது சீசன் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. பிப்.23ஆம் தேதி தொடங்கும் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மார்ச் 17ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. கடந்த முறை மும்பையில் உள்ள மைதானங்களில் மட்டும் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் நடந்த நிலையில், இம்முறை டெல்லி மற்றும் பெங்களூரு மைதானங்களில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிளே ஆஃப் சுற்றுடன் சேர்த்து மொத்தமாக 22 போட்டிகள் நடத்த உள்ளதாக அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் விளையாடிய மும்பை – டெல்லி அணிகள் இம்முறை முதல் போட்டியில் விளையாடுகின்றன. அதேபோல் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், யுபி வாரியர்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதவுள்ள இந்த தொடர் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நாளை மறுநாள் மாலை 6.30 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான தொடக்க விழா பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற தொடக்க விழாவில் கீர்த்தி சனோன் மற்றும் கியாரா அத்வானி இருவரும் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இம்முறை பாலிவுட்டின் உச்ச நாயகர்கள் தொடக்க விழாவில் நிகழ்ச்சி நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறிப்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், ஷாகித் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, வருண் தவான், கார்த்திக் ஆர்யன், டைகர் ஷெராஃப் உள்ளிட்ட 6 பேரும் பங்கேற்கவுள்ளனர். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் இசை நிகழ்ச்சிகள், நடனங்கள் உள்ளிட்டவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.