“டிமார்ட்” கம்பெனி சிஇஓ நவில் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா? சொத்து மதிப்பு மட்டுமே 6500 கோடி!

சென்னை: வெற்றிகரமான தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர் நிறைந்த நாடாக இந்தியா விளங்குகிறது.

பலரும் ஏகப்பட்ட சொத்துக்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கின்றனர்.

இதில் இக்னேஷியல் நவில் நோரோன்ஹா (Ignatius Navil Noronha) கார்ப்பரேட் துறையில் உச்சாணிக் கொம்பில் இருக்கிறார். தொலைநோக்குச் சிந்தனையுடனான தலைமைப் பண்பை கொண்டுள்ளார். டிமார்ட்டின் சிஇஓவான இக்னேஷியஸ் நவில் நோரோன்ஹா இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

அவர் எந்தவொரு நிறுவனத்தையும் சொந்தமாக நிறுவவில்லை. நேரடியாக வணிக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றாலும், டிமார்ட்டின் பெரும் வெற்றியில் அவருக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. இவ்வளவு பணம் குவித்தபோதிலும், நவில் நோரோன்ஹா வெளியில் தெரியாத அளவுக்கு அடக்கமாக இருக்கிறார். பெரிய நிறுவனங்களின் மற்ற சிஇஓக்களை விட அவரது அலுவலக அறை மிகவும் சிறியதுதானாம்.

நவில் நோரோன்ஹா, எஸ்ஐஇஎஸ் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் அறிவியல் பட்டமும், நர்சி மோன்ஜீ இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.

டிமார்ட்டில் அவரது பயணம் 20ஆவது வயதில் தொடங்கியது. ராதாகிஷன் தமானியால், பணியமர்த்தப்பட்ட நவில் நோரோன்ஹா, சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்ற திட்டங்கள், செயல்பாடுகளுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கினார். இதன் மூலம் தனது தகுதியை விரைவாக நிரூபித்தார்.

டிமார்ட்டின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, நவில் நோரோன்ஹா இந்துஸ்தான் யூனிலீவரில் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். அங்கு அவர் விற்பனை நிர்வாகியாக வேலை செய்தார். மார்க்கெட் ரிசர்ச் மற்றும் மாடர்ன் மார்க்கெட்டிங்கில் நல்ல அனுபவத்தைப் பெற்றார். அவரது அனுபவமும் திறனும், டிமார்ட்டின் வளர்ச்சிப் பாதையில் முக்கியப் பங்கு வகித்தன.

தற்போது டிமார்ட்டின் சிஇஓவாக பணியாற்றும் நவில் நோரான்ஹோ அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தை புதிய உயரத்துக்கு தொடர்ந்து உயர்த்தி சென்றார். எப்எம்சிஜி துறையை தலைகீழாகப் புரட்டிப்போட்ட அவரது நுணுக்கமான உத்திகளுக்காக வணிக சமூகத்தால் அவர் கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்- GOAT என்று வர்ணிக்கப்படுகிறார்.

அவரது தனிச்சிறப்பான, 48 மணி நேர சப்ளையர் கொள்கை ஒரு கேம் சேஞ்சராக உருவெடுத்தது. வர்த்தகத்தில் இந்த உத்தி மிகவும் புதிது. வெற்றிகரமானதும்கூட. மீடியாவின் பார்வையில் இருந்து நவில் விலகி விலகிச் சென்றாலும் அவரை ஊடகங்கள் துரத்தியே சென்றன.

மும்பையில் சொகுசு அப்பார்ட்மென்ட் வாங்கியபோது தலைப்புச் செய்திகளில் அவர் இடம் பெற்றார். கிழக்கு பாந்த்ரா பகுதியில் அவர் ரூ.70 கோடிக்கு அந்த அப்பார்ட்மென்ட்டை வாங்கியுள்ளார். 9552 சதுர அடி பரப்பளவுள்ள அந்த அப்பார்ட்மென்ட்டில் 10 வாகனங்களை நிறுத்துவதற்கான கேரேஜும் உள்ளது.

அவென்யூ சூப்பர்மார்ட்ஸில் நவில்லுக்கு 2 சதவீத பங்குகள் இருக்கின்றன. இத்துடன் இவரது நிகர சொத்து ரூ.6500 கோடி என மதிப்பிடப்பட்டுளளது. 2021இல் அவரது நிறுவனம் 113 சதவீத வளர்ச்சியை எட்டியது. இதன் மூலம் உலகின் பணக்காரரான சிஇஓவாக நவில் உருவெடுத்துள்ளார். 2021-22 நிதியாண்டில், நவில் நோரோன்ஹாவின் சம்பளம் ரூ.4.5 கோடிக்கும் மேல் எனக் கூறப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *