கட்டுமஸ்தான பழைய விஜயகாந்த்: உடற்பயிற்சி வீடியோ
தமிழ் திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களால் புரட்சிக் கலைஞர் என்றும் கேப்டன் என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு, கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஊடகங்களில் திரைத்துறையினரும் அரசியல்வாதிகளும் நண்பர்களும் அவருடனான நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், மறைந்த விஜயகாந்த் பற்றிய பழைய வீடியோக்கள், பாடல்கள், உரையாடல்கள் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.
மதுரையில் பிறந்து வளர்ந்த விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ், இவர் சினிமா துறைக்கு நடிக்க வருவதற்கு முன்பு தனது தந்தையின் ரைஸ் மில்லில் வேலை செய்து வந்தார். பிறகுதான், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வந்து சினிமாவில் நடித்து முன்னணி நடிகாராக உயர்ந்தார். விஜயகாந்த் நடித்த படங்கள் பெரும்பாலானவை ஏழை மக்களுக்கு ஆதரவாக போராடும் கதாநாயகன், ஊழலுக்கு எதிராக போராடும் கதாநாயகன், நேர்மையான போலீஸ்காரர் ஆகிய கதாபாத்திரங்கள் என்பதால் ரசிகர்களால் புரட்சிக் கலைஞர் என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
அவருடைய கேப்டன் பிரபாகரன் படம் மாபெரும் வெற்றி அடைந்து அவருடைய கேப்டன் பிரபாகரன் கதாபாத்திரத்தை வைத்தே அவரை கேப்டன் விஜயகாந்த் என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்தனர். பின்னர், அரசியல் கட்சித் தொடங்கி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையை அடைந்தார். இறுதி காலத்தில் அவர் உடல்நலம் குறைந்து சில ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை காலமானார்.
விஜயகாந்த் பற்றி சினிமா துறையினர் பலரும் சொல்வது எளிமையான மனிதர், அவர் அனைவருக்கும் உதவும் மாந்தநேயப் பண்பாளர், நல்ல மனிதர் என்பதுதான்.
விஜயகாந்த்தின் நற்பண்பை பறைசாற்றும் விதமாக, அவர் சினிமாவில் பெரிய நடிகராக உயர்ந்த பிறகு, மதுரையில் தனது ரைஸ் மில்லில் வேலை செய்த ஊழியர்களுடனும் தனது நண்பர்களுடனும் ஜாலியாக உரையாடிய, உடற்பயிற்சி செய்த பழைய வீடியோவை டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில், மறைந்த விஜயகாந்த் பெரிய நடிகராக உயர்ந்த பிறகு, அவர் இளைஞராக இருந்தபோது மதுரையில் தனது ரைஸ் மில்லில் வேலை செய்யும் ஊழியர்களுடனும் நண்பர்களுடனும் ஜாலியாகப் பேசுவது மற்றும் கட்டுமஸ்தான உடலை பராமரிப்பதற்காக உடற்பயிற்சி வீடியோ வைரலாகி வருகிறது.
ரைஸ்மில்லில் வேலை செய்யும் ஒரு மூதாட்டியுடன் விஜயகாந்த் சிரித்துப் பேசுகிறார். அதற்கு அந்த மூதாட்டி எங்க முதலாளில் சின்ன பிள்ளையா இருக்கும்போது குளுப்பாட்டி, சொக்கா, டவுசர் எல்லாம் துவைச்சு தருவேன் என்று கூறுகிறார்.
அதோடு, விஜயகாந்த் தனது மதுரை நண்பர்களுட்ன் ஜாலியாக இயல்பாக அமர்ந்து பேசுகிறார். அதுமட்டுமல்ல, விஜயகாந்த் தனது கட்டுமஸ்தான உடலைப் பராமரிப்பதற்காக மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்கிறார்.
டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனல் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன், ஒருவர் விஜயகாந்த்தின் கட்டுமஸ்தான உடலைப் பார்த்து, “கருந்தேக்கு மாதிரி நல்லா தேஜஸா இருந்த மனுசன்.. இந்த காலம் தான் எவ்ளோ கொடூரமானது… RIP கேப்டன்” என்று குறிப்பிட்டுள்ளார்.