காரசாரமான முட்டை சுக்கா… சில நிமிடங்கள் போதும்!

முட்டை கொண்டு ஆம்லெட், முட்டை மசாலா, முட்டை தொக்கு, முட்டை வறுவல் என விதவிதமாக செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் எப்போதாவது முட்டை கொண்டு சுக்கா செய்து சாப்பிட்டுள்ளீர்களா. இல்லையென்றால் இந்த ரெசிபி உங்களுக்காக தான்.

மிளகு தூள் சேர்த்து எவ்வாறு காரசாரமான முட்டை சுக்கா எளிதாக செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

முட்டை – 5

பெரிய வெங்காயம் – 3

தக்காளி – 2

இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

சோம்பு – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 2 டீஸ்பூன்

கருப்பு மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்

கடலை மாவு – 1/2 டீஸ்பூன்

எண்ணெய் – தேவைக்கேற்ப

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் மிளகுத் தூள், கரம் மசாலா, கடலை மாவு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துவிட்டு கொள்ளவும்.

பிறகு இந்த முட்டை கலவையை எண்ணெய் தடவிய பாத்திரத்திலோ அல்லது ஏதேனும் ஒரு டிபன் பாக்ஸிலோ ஊற்றி கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் இட்லி பாத்திரம் ஒன்றை வைத்து அதில் இந்த முட்டை பாக்ஸை வைத்து 20 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

குறிப்பு : டூத்பிக் உதவியுடன் முட்டை முழுவதுமாக வேகவைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

வேகவைத்துள்ள முட்டையை சிறிய சிறிய சதுர வடிவ துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு சேர்த்து கொள்ளுங்கள்.

அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வத்தகக்கவும்.

பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.

அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் கரம் மசாலா தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

இப்போது அதனுடன் வெட்டி வைத்துள்ள முட்டைத் துண்டுகளைச் சேர்த்து அனைத்து முட்டைத் துண்டுகளும் மசாலாவுடன் சேரும் அளவிற்கு நன்கு கலந்து வதக்கவும்.

பிறகு அதில் காரத்திற்கு ஏற்ப கருப்பு மிளகு தூள் சேர்த்து சில நிமிடம் கிளறி இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

அனைத்தையும் சில நிமிடங்கள் நன்றாக வதக்கி அடுப்பை அணைத்தால் சுவையான ‘முட்டை சுக்கா’ ரெடி..

இந்த முட்டை சுக்காவை அனைவருக்கும் சூடாக பரிமாறி மகிழுங்கள்…

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *