விறுவிறுப்பாக நடைபெறும் கங்குவா பட வேலைகள்… டப்பிங் பணிகளை தொடங்கிய சூர்யா!
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.
ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஒன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி 21ஆம் நூற்றாண்டு வரை தொடர்வது போல் கதை எழுதப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அந்நிறுவனத்தின் சிஇஓ தனஞ்செயன், ‘‘கங்குவா படத்தில் முழுமையாக வரலாற்று காட்சிகள் இடம்பெறாது எனவும், அது படத்தின் ஒரு பகுதிதான் எனவும் தெரிவித்தார். மேலும் இந்தப் படமானது தற்போதைய காலகட்டத்தில் கோவாவில் நடக்கும் பொழுதுபோக்கு படம் என்று குறிப்பிட்டுள்ளார்.
‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இப்படத்தின் தகவல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து கொண்டே வருகிறது. 3டியில் உருவாகும் ‘கங்குவா’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னால் வெளியாகி வரவேற்பை பெற்றது.
அண்மையில் இப்படத்தின் சூர்யா நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதுகுறித்து சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், ‘கங்குவா’ படத்தில் சூர்யாவுக்கான டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.