இந்தியாவில் 10 லட்சம் ஹூண்டாய் கிரெட்டா கார்கள் விற்பனையாகி சாதனை!
2015-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா (Creta), இதுவரை பத்து லட்சம் கார்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்திய சந்தையில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு கிரெட்டா கார் விற்பனையாவதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் கூறுகிறது.
இந்திய உள்நாட்டுச் சந்தையில் மிட் சைஸ் SUV கார்களில் அதிகமாக விற்பனையாகும் கார் எனப் பெயர் பெற்றுள்ள ஹூன்டாய் கிரெட்டா, இதுவரை 2,80,000 கார்கள் வெளிநாட்டிற்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய் கிரெட்டா கார் ஒரு பிராண்டாக இந்திய வாடிக்கையாளர்களின் மனங்களை கவர்ந்துள்ளது என்பதே உண்மை. இன்று இந்திய சாலைகளில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட கிரெட்டா கார்கள் பயணிக்கின்றன. இந்திய SUV கார் சந்தையில் கிரெட்டா என்ற பிராண்ட் யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தொடர்ந்து நிரூபித்து வருகிறது எனக் கூறுகிறார் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் தலைமை செயல்பாட்டு அதிகாரி தருன் கார்க். .
கிரெட்டா கார் மீது தங்கள் அன்பையும் நம்பிக்கையையும் வைத்திருக்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். ஆட்டோமொபைல் துறையில் புரட்சிகரமான புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதில் முன்னோடிகளாக இருக்கும் ஹுண்டாய் நிறுவனம், இத்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் எங்களது அளவுகோலை மறுவரையறை செய்து புதிய மைல்கல்லை தொடர்ந்து எட்டுவோம் என்றும் தருன் கார்க் கூறியுள்ளார்.
ஹூண்டாய் நிறுவனத்தின் வருடாந்திர உள்நாட்டு கார் விற்பனையில் 2023-ம் ஆண்டு கிரெட்டாவின் பங்களிப்பு 26.1 சதவிகிதமாக உள்ளது. மிட் சைஸ் SUV பிரிவில் இதன் பங்களிப்பு 30.7 சதவிகிதமாக இருந்தது. தற்போது இரண்டாம் தலைமுறை மாற்றங்களுடன் இயங்கி வரும் கிரெட்டா காரில், சமீபத்தில் தான் சில அப்டேட்கள் செய்யப்பட்டது. அதற்குள் இந்த புதிய மாடலை வாங்குவதற்கு தயாராக 60,000-க்கும் அதிகமான நபர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
ஹூண்டாய் கிரெட்டா காரின் ஆரம்ப விலை ரூ. 10,99,900 லட்சத்தில் தொடங்கி ரூ. 20,14,900 வரையில் கிடைக்கிறது. கியா செல்டாஸ், மாருதி சுசூகியின் கிராண்ட் விடாரா, டொயேட்டோ அர்பன் க்ரூய்ஸர் ஹைரைடர், ஹோண்டா நிறுவனத்தின் எலிவேட், ஸ்கோடா குஷாக், வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகன் மற்றும் எம்ஜி அஸ்டார் ஆகியவை ஹூண்டாய் கிரெட்டாவின் போட்டியாளர் ஆகும்.
கிரெட்டா காரின் இஞ்சினைப் பொறுத்தவரை, 1.5 லிட்டர் MPi பெட்ரோல் (115PS பவர் மற்றும் 144Nm பீக் டார்க்), 1.5 லிட்டர் Kappa Turbo GDi பெட்ரோல் (160PS பவர் மற்றும் 253Nm பீக் டார்க்) மற்றும் 1.5 லிட்டர் U2 CRDi டீசல் (116PS பவர் மற்றும் 250Nm பீக் டார்க்) என மூன்று ஆப்ஷனில் கிடைக்கிறது. டிரான்ஸ்மிசனைப் பொறுத்தவரை 6-ஸ்பீடு மேனுவல், IVT ஆட்டோமெட்டிக், 7-ஸ்பீடு DCT ஆட்டோமெட்டிக், 6-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் என நான்கு ஆப்ஷனில் கிடைக்கிறது.