கேப்டன் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கிய பிரபல நடிகர்..!
நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் காலமானார். இவரது மறைவுக்கு நேரிலும், இணையதளம் வாயிலாகவும் திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் நினைவிடத்தில் ஏராளமான தொண்டர்களும், பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் மோகன், விஜயகாந்த் நினைவிடத்திற்கு இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது ரசிகர் மன்றம் சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
அதன் பிறகு நடிகர் மோகன் செய்தியாளர்களிடம், “நடிகர்களுக்கும், மக்களுக்கும் அவர் கேப்டனாக இருந்து வாழ்ந்தவர். அவருடைய நண்பர் என்பதே எனக்குப் பெருமை. அவருடைய முரட்டு தைரியமும், நேர்மையும் எனக்குப் பிடிக்கும். அவருடைய நினைவிடத்தில் இப்போது அன்னதானம் கொடுத்து வருகிறார்கள் என்பது நெகிழ்ச்சியான விஷயம். என்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக ஆயிரம் பேருக்கு அன்னதானம் கொடுத்தோம் என்பதில் பெருமைப்படுகிறேன். தினமும் இந்த அன்னதானம் நடப்பது என்பதைக் கேட்டபோது அவர் மீதான மரியாதை இன்னும் அதிகமாகி விட்டது” என்று கூறினார்.