ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயிலின் புகைப்படம்..!
ஐடி நகரமான பெங்களூருவில் 1.2 கோடி வாகனங்கள் இயங்குவதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக திகழ்கிறது. பெங்களூருவில் போக்குவரத்து நெருக்கடியை ஓரளவிற்கு கட்டுக்குள் வைத்திருப்பதில் மெட்ரோ ரயிலின் பங்களிப்பு மிக அதிகம். பெங்களூரு ஒயிட்பீல்டு – செல்லகட்டா இடையே ஊதா நிற மெட்ரோ வழித்தடம் மற்றும் சில்க் இன்ஸ்டிடியூட் – நாகசந்திரா இடையே பச்சை நிற மெட்ரோ வழித்தடம் ஆகிய இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்களில் தினமும் சுமார் 8 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
பெங்களூரு தெற்கு பகுதியை எலக்ட்ரானிக் சிட்டியுடன் இணைக்கும், ஆர்வி ரோடு – பொம்மசந்திரா இடையேயான மஞ்சள் நிற வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. பெங்களூரு மஞ்சள் நிற வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், இந்த வழித்தடத்தில் இயக்குவதற்கான, ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயிலின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் உற்பத்தி செய்யப்பட்ட, தலா 6 பெட்டிகள் கொண்ட 2 மெட்ரோ ரயில்கள் கடந்த 6ம் தேதி சென்னை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில், அங்கு சுங்க அனுமதி பெற்ற பின்னர் சாலை மார்க்கமாக பெங்களூரு கொண்டுவரப்பட்டது. கடந்த 14ம் தேதி அதிகாலை 2 மெட்ரோ ரயில்களுக்கான 12 பெட்டிகளும் பெங்களூரு ஹெப்பகோடி வந்தடைந்தது.
பெங்களூரு ஹெப்பகோடியில் ஒரு மெட்ரோ ரயிலுக்கு 6 பெட்டிகள் வீதம், 12 பெட்டிகளும் 2 மெட்ரோ ரயில்களாக இணைக்கப்பட்டு, அதன் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் இரண்டும் 6 மாதங்கள் மெட்ரோ வழித்தடத்தில் இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட பின்னரே, செயல்பாட்டுக்கு வரும். 15 வெவ்வேறு பரிசோதனைகளுக்கு பின், மெயின்லைனில் இருந்து இந்த ரயில் இயக்கப்படும்.
அதன்பின்னர் சம்மந்தப்பட்ட துறைகளிடமிருந்து முறையான பாதுகாப்பு சான்றிதழ்களை பெற்ற பின்னரே மஞ்சள் நிற மெட்ரோ வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மஞ்சள் நிற வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குள்ளாக ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் அனைத்து சோதனைகளும் முடிவடைந்து, இயக்கப்பட தயாராகிவிடும்.