இது தெரியுமா..? ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் என்னென்ன தானங்களை செய்வது நல்லது..!
மேஷம்
இவர்களுக்கு அஷ்டமாதிபதியும் செவ்வாயாக இருப்பதால் ரத்த தானத்தை தொடர்ந்து ஏதேனும் ஒரு செவ்வாய் கிழமையில் இவர்கள் தானம் செய்து வருவது நல்லது. காரணம் உடலில் ஓடும் ரத்தத்திற்கு செவ்வாய் தான் அதிபதி. அந்த வகையில் இவர்கள் ரத்த தானம் செய்ய, ராசி அதிபதியான செவ்வாயின் அருள் இவர்களுக்குப் பூரணமாகக் கிடைக்கப்பெறும்.ரத்த தானம் செய்ய முடியாதவர்கள், ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் பயன்படுத்தும் சாதனங்களை வாங்கித் தரலாம். ரத்த சிவப்பு நிறம் கொண்ட ஆடைகளையும் கூட தானமாக செய்யலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் அஷ்டமாதிபதி அல்லது அந்த அளவிற்கு நன்மை செய்யக் கூடிய கிரகம் இல்லை என்பதால் குரு அருளைப் பெற ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் அல்லது தங்களால் முடிந்த கல்வி சம்மந்தமான பொருள்களை வாங்கித் தருதல் நன்மை செய்யும். கோயில்களில் நடக்கும் உழவாரப் பணி போன்றவற்றில் கூட கலந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்கு சனி பகவான் அஷ்டமாதிபதி அவரே பாக்கியாதிபதியும் கூட அதனால் சனிக் கிழமைகளில் கோயில் தீபங்களுக்கு இயன்ற அளவில் நல்லெண்ணெய் வாங்கித் தானம் தரலாம்.
கடகம்
கடக ராசிக்கு அதிபதி சந்திரன், இந்த ராசிக்கு சனி 7 மற்றும் 8 ஆம் அதிபதியாக வருகிறார். தவிர இந்த ராசி ஜல ராசி என்பதால் தாகமாக இருப்பவர்களுக்கு தண்ணீரை தானம் செய்யலாம். இலவசமாக தண்ணீர் பந்தல் போன்றவற்றை இவர்கள் குறிப்பாக வெயில் காலங்களில் வழங்குதல் சிறப்பு.
சிம்மம்
சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன், இந்த ராசிக்கு சனி அளவு கடந்த தீமையை செய்வார். இதனால் இவர்கள் சனிக் கிழமைகளில் இரும்பை தானம் செய்யலாம். எள் உருண்டையை கூட தானம் செய்யலாம்.
கன்னி
கன்னி ராசிக்கு அதிபதி புதன். அத்துடன் கன்னி ராசியில் தான் புதன் உச்சம் அடைவார். இந்நிலையில் இவர்களிடத்தில் கவர்ச்சி இருக்கும். அதனால் மாற்றுப் பாலினத்தவர்களை அதிகம் ஈர்ப்பார்கள். இதனால் பெண்களால் சில துன்பங்களை இவர்கள் சந்திக்க நேரலாம். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் மேலான துன்பத்தை அளிக்கக் கூடியவர். அதனால் இவர்கள் செவ்வாய் கிழமையில் ஏழைகளுக்கு ரத்த சிவப்பு நிறம் உள்ள ஆடைகளை அல்லது வேஷ்டி – சட்டைகளை வாங்கி தானம் செய்யலாம்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களுக்கு குரு பகவான் அனைத்து விதங்களிலும் கெடுப்பார். இவர்கள் ராசியில் சனி உச்சம் பெறுவது இன்னொரு சிறப்பு. எனினும் குரு பகவான் பாதகாதிபதி என்பதால் வியாழக் கிழமைகளில் மஞ்சள் நிறம் கொண்ட பொருள்களை தானம் செய்யலாம். ஏழை மாணவர்களுக்கு கல்வி சம்மந்தமான பொருள்களை வாங்கித் தரலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு புதன் பாதகாதிபதி. அதாவது அதிக கெடுதல்களை செய்வார். இதனால் இவர்கள் மரக்கன்றுகளை தானம் செய்யலாம். புதன் கிழமையில் பச்சை நிற ஆடைகள் அல்லது பொருள்களை தானம் செய்யலாம். பச்சை பயிறு சுண்டல் செய்து கூட ஏழை எளிவர்களுக்கு தானம் செய்யலாம்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களுக்கு சுக்கிரன் அந்த அளவிற்கு நன்மையை செய்ய மாட்டார். அதே போல சந்திரன் கூட அவ்வளவு நன்மைகளை செய்ய மாட்டார். அதனால் இவர்கள் திங்கட் கிழமைகளில் ஏழை – எளியவர்களுக்கு தங்களால் இயன்ற அளவு பச்சரிசி தானம் செய்யலாம். அதே போல, வெள்ளிக் கிழமைகளில் மொச்சையில் சுண்டல் செய்து தானம் செய்வதும் சிறப்பு.
மகரம்
மகர ராசி அன்பர்களுக்கு சூரியன் பெரிய அளவில் தீமையை செய்யும் கிரகம் எனலாம். இதனால் இவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் கோதுமை தானியத்தை முடிந்த அளவில் வாங்கி ஏழை – எளிய மக்களுக்கு தானம் செய்யலாம்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களுக்கு சந்திரன் பெரிய தீமையை செய்யக்கூடிய கிரகம். அதனால் இவர்கள் திங்கட் கிழமைகளில் கோயில் ஆலயங்களுக்கு சென்று சந்திரனின் தூப தீபமான சாம்பிராணியை வாங்கி தானம் செய்யலாம். பெளர்ணமியில் அம்பாள் கோயில்களில் வெண் பொங்கல் தானம் செய்யலாம்.
மீனம்
மீனம் ராசி அன்பர்களுக்கு சுக்கிரன் கெடுதலை செய்யும் கிரகம் என்பதால் வெள்ளிக் கிழமைகளில் கோயில் தெய்வங்களுக்கு வாசனை மிகுந்த வெள்ளை மலர் மாலையை வாங்கித் தரலாம். கர்ப்பவதியான பெண்களுக்கு அல்லது தாய்மார்களுக்கு அலங்கார பொருள்களை பரிசளிக்கலாம்.