CE20 கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை முடிவு! இஸ்ரோ கொடுத்த ககன்யான் அப்டேட்!
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான சிஇ20 (CE20) கிரையோஜெனிக் எஞ்ஜின் சோதனை வெற்றிகரமாக முடிந்திருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
பூமியில் இருந்து 400 கிமீ தொலைவுள்ள புவியின் தாழ்வட்டப் பாதைக்கு பகுதிக்கு 3 விண்வெளி வீரர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் பூமிக்கு வரவழைக்கும் நோக்குடன் ககன்யான் திட்டத்திற்கான தயாரிப்புகளில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
அதற்கு முன் ககன்யான் விண்கலத்தில் பல கட்ட பரிசோதனைகளைச் செய்துவருகிறது. அதன்படி, கிரையோஜெனிக் எஞ்ஜின் சோதனை 7 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், இறுதிக்கட்ட பரிசோதனை நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் பிப்ரவரி 13ஆம் தேதி வெற்றிகரமாக முடிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும்போது விண்கலனின் தாங்கும் திறன், செயல்திறன், நிலைத்தன்மை ஆகியவை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளது. இத்துடன் ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும் CE20 கிரையோஜெனிக் எஞ்ஜின் புகைப்படத்தையும் இஸ்ரோ பகிர்ந்துள்ளது.
மனிதர்கள் விண்வெளிக்குச் சென்றுவருவதற்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு ஹியூமன் ரேட்டிங் சோதனை நடத்தப்படுகிறது. இதற்காக CE20 எஞ்ஜினை குறைந்தபட்சம் 6,350 வினாடிகள் வெவ்வேறு சூழல்நிலைகளில் சோதனை மேற்கொள்ள வேண்டும். அதன்படி, 8,810 வினாடிகளுக்கு வெவ்வேறு இயக்க நிலைமைகளின் கீழ், நான்கு என்ஜின்கள் 39 முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்று இஸ்ரோ கூறியிருக்கிறது.
இத்துடன் ககன்யான் திட்டத்திற்கான CE20 எஞ்ஜினின் அனைத்து தரைத் தகுதிச் சோதனைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன எனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.