கோயில்கள் மீது 10% வரி விதிப்பு: கர்நாடக காங். அரசின் இந்து விரோதக் கொள்கை என பாஜக கண்டனம்

கர்நாடகா மாநில சட்டசபையில் புதன்கிழமையன்று ‘கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024’ நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் திருகோயில்களின் வருமானத்தில் 10 சதவீதத்தை அரசு வசூலிக்க இந்தச் சட்ட மசோதா அனுமதிக்கிறது.

இந்த சட்டம் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசின் இந்து விரோத கொள்கயைக் காட்டுவதாக பாஜக சாடியுள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான மாநில அரசு நிதியைத் தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

ட்விட்டரில் பதிவிட்டுள்ள கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, இந்த மசோதா மூலம் காங்கிரஸ் அரசாங்கம் தனது ‘காலி கஜானாவை’ நிரப்ப முயற்சிப்பதாகக் கூறியுள்ளார். மாநில அரசு ஏன் இந்து கோவில்களில் இருந்து வருமானம் ஈட்டப் பார்க்கிறது என்றும் மற்ற மத ஸ்தலங்களில் இருந்து இப்படி வசூலிக்கவில்லையே என்றும் கேட்டிருக்கிறார்.

மாநிலத்தில் தொடர்ந்து இந்து விரோத கொள்கைகளை கடைப்பிடித்து வரும் காங்கிரஸ் அரசு, தற்போது இந்து கோவில்களின் வருவாயை குறிவைத்துள்ளது என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

“இந்த் சட்டத்தின் கீழ், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் கோவில்களின் வருமானத்தில் 10% அரசு வசூலிக்கும். கோவில் வளர்ச்சிக்கு பக்தர்கள் அர்ப்பணிக்கும் காணிக்கையை, திருப்பணிக்கு ஒதுக்க வேண்டும். கோவில் மற்றும் பக்தர்களின் வசதிக்காகவே பயன்படுத்த வேண்டும். அதைத் தவிர்த்த வேறு நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்டால் மோசடி நடக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

விஜயேந்திர எடியூரப்பாவின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவரும், கர்நாடக அரசின் அமைச்சருமான ராமலிங்க ரெட்டி, பாஜக தொடர்ந்து மத அரசியலில் ஈடுபடுவதாகச் சாடினார். காங்கிரஸ் பல ஆண்டுகளாக இந்துக்களின் நலன்களையும் கோயில்களையும் தொடர்ந்து பாதுகாத்து வருவதாகவும் ரெட்டி கூறினார். காங்கிரஸ் இந்து மதத்தின் உண்மையான ஆதரவாளர்களாக இருக்கிறோம் என்றும் ரெட்டி கூறியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *