இன்று வெளியாகிறது ஐபிஎல் 2024 போட்டி அட்டவணை… நேரலையில் இலவசமாக பார்ப்பது எப்படி?
கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான போட்டி அட்டவணை இன்று மாலை வெளியாக உள்ளது. இதனை ரசிகர்கள் இலவசமாக நேரலையில் பார்க்கலாம்.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. அந்த வகையில் முதல் 15 நாட்களுக்கான போட்டி அட்டவணை இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவலின்படி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 26 ஆம் தேதி முடிவடையும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 74 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஆனால் கடந்த ஆண்டு 60 நாட்களாக போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டு போட்டிகள் 67 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது ஐபிஎல் போட்டி அதிக நாட்கள் நடத்தப்பட்டது. மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இன்று மாலை 5 மணிக்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி அட்டவணை வெளியாக உள்ளது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்கள் டிவியில் நேரலையாக வழங்குகிறது. இதேபோன்று ஜியோ சினிமா மொபைல் ஆப் மற்றும் ஜியோ சினிமா டாட் காம் தளத்தில் (jiocinema.com) ஐபிஎல் போட்டி தொடர்பான அறிவிப்பை நேரலையாக ரசிகர்கள் பார்க்கலாம்.