சென்னை மெகா திட்டம்.. ஓடிவந்து உதவிய ஜப்பான், செம..!
2024-25 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட்டை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள, நிலையில் மாநிலத்தின் பல வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதியும், நிதியுதவியும் கிடைக்க உள்ளதால் அனைத்து திட்டங்களும் வேகமாகச் செயல்பட உள்ளது.
இந்த நிலையில் சென்னை பெரிஃபெரல் ரிங் சாலை திட்டத்தின் 2-வது கட்டத்திற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) சுமார் ரூ.2,809 கோடி அதாவது 49,847 மில்லியன் ஜப்பானிய யென் கடனாக அளிக்க அனுமதித்துள்ளது.
ஜப்பான் அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ‘சென்னை-பெங்களூரு தொழில்துறை காரிடார்-ன் விரிவான மாஸ்டர் பிளான் (2015)’ திட்டத்தின் கீழ் சென்னை பெரிஃபெரல் ரிங் சாலை திட்டம் முன்னுரிமை அளிக்கப்பட்டு முடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஐந்து கட்ட மெகா திட்டத்தில் 133 கிமீ சாலை அமைக்க ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது, இந்த சாலை மூலம் சென்னை பெருநகரப் பகுதியில் அதிகரித்து வரும் சாலைப் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க இந்த இணைப்பு சாலை பெரிய அளவில் உதவும்.
இந்த திட்டத்துடன், இன்னர் ரிங் சாலை, சென்னை பைபாஸ் சாலை மற்றும் அவுட்டர் ரிங் ரோடு இணைத்து ரேடியல்-ரிங் சாலை வலையமைப்பை உருவாக்கி, வாகனங்களுக்கு மாற்றுப் பாதையை வழங்குவதன் மூலம் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சிறப்பாக இணைத்து வேகமாகப் போக்குவரத்தை உருவாக்க முடியும்.
பெரிஃபெரல் ரிங் சாலை திட்டம் மூலம் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. சென்னை பெருநகரப் பகுதியின் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் இருந்து காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு எளிதாக பயணிக்க முடியும் வாய்ப்பை வழங்கும்.
இந்த திட்டம் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு இடையிலான போக்குவரத்து நேரத்தை சுமார் 40 நிமிடங்கள் குறைக்கும். இந்த திட்டம் 5 கட்டங்களாக பிரித்து செயல்படுத்தப்பட உள்ளது, முதல் கட்டம் சென்னை வடக்கு பகுதியில் சாலை 24.5 கிலோமீட்டர் சாலை அமைக்க ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) நிதியுதவி செய்தது.
இதன் பின்பு தற்போது இத்திட்டத்தின் 2-5 கட்டத்திற்கு 2,809 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளது.