ரத்தன் டாடா: ரகசியங்கள் நிறைந்த வாழ்க்கை வரலாறு.. புத்தகம் வெளியிடுவதில் ஏகப்பட்ட பிரச்சனையா..!
இந்தியாவில் மிகவும் மதிக்கத்தக்க தொழிலதிபர் ரத்தன் டாடா ஆவார். டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா அவரது அறிவு, தொழில்திறன், அறச்சிந்தனைக்காகப் பெயர் பெற்றவர்.
இவருக்கு எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில் உலகெங்கும் அதிகளவு ரசிகர்களும் பாலோயர்களும் உள்ளனர்.அவரது அறச்செயல்களுக்காக அடிக்கடி செய்திகளில் இடம் பெறுவார்.
ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் எழுதப்பட்டு வெளியாகும் நிலையில் உள்ளது. சில காரணங்களுக்காக இந்தப் புத்தக வெளியீடு தள்ளிப் போகிறது. ரத்தன் டாடா வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை டாடா குழுமத்தின் முன்னாள் அதிகாரி தாமஸ் மேத்யூ எழுதியுள்ளார்.
ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் இந்தப் புத்தகத்தில் மேலும் நிறைய விவரங்கள் பதிவிட்டு உள்ளதாக தெரிகிறது. விலங்குகளுக்கான மருத்துவமனை அமைப்பது கூட சமீபத்தில் தான் சேர்க்கப்பட்டது.
புத்தகத்தை வெளியிடும் உரிமையை பிரபல ஹார்ப்பர் காலின்ஸ் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ரூ.2 கோடிக்குப் பெற்றுள்ளது. புதினங்கள் அல்லாத புத்தகங்களுக்கு அதன் நூலாசிரியர்களுக்கு வழங்கப்படும் தொகையை காட்டிலும் சுமார் 10 மடங்கு அதிக தொகை வழங்கப்பட்டு உள்ளது.
ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றின் பிரதியை டாடாவிடம் எழுத்தாளர் மேத்யூ ஜனவரி 2022 இல் பகிர்ந்து கொண்டார். இப்புத்தக வெளியீட்டாளரான ஹார்பர் காலின்ஸ் ஆரம்பத்தில் ‘ரத்தன் டாடா-ஏ லைஃப்’ என்ற தலைப்பில் இந்தப் புத்தகத்தை நவம்பர் 2022 இல் வெளியிட திட்டமிட்டிருந்தது.
பின்னர், தேதி மார்ச் 2023 க்கும் அதன் பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரிக்கும் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இப்போது வரை புத்தகம் வெளியிடப்படவில்லை. அது எப்போது வெளிவரும் என்று எந்த தகவலும் இல்லை.
ரத்தன் டாடா பம்பையில் 1937 டிசம்பர் 28 ஆம் தேதியன்று பிறந்தார். மும்பையை தளமாகக் கொண்ட டாடா குழுமத்தின் தலைவராக 1991-2012 மற்றும் 2016-17 பதவி வகித்தார்.
அவர் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் பட்டப்படிப்பை டாடா குழும வணிகங்களில் ஒன்றான நேஷனல் ரேடியோ மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக 1971இல் நியமிக்கப்பட்டார்.
பத்தாண்டுகளுக்குப் பிறகு டாடா இண்டஸ்ட்ரீஸின் தலைவராக ஆனார்.
டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றதும், டாடா தீவிரமாக அதை விரிவுபடுத்த முயன்றார். அதன் வணிகங்களை உலகமயமாக்குவதில் அதிக கவனம் செலுத்தினார். 2000 ஆம் ஆண்டில் குழு லண்டனை தளமாகக் கொண்ட டெட்லி டீயை $431.3 மில்லியனுக்கு வாங்கியது.
2004 ஆம் ஆண்டில் தென் கொரியாவின் டேவூ மோட்டார்ஸின் டிரக்-உற்பத்தி நிறுவனத்தை $102 மில்லியனுக்கு வாங்கியது.
2007 ஆம் ஆண்டில், டாடா ஸ்டீல், ஆங்கிலோ-டச்சு எஃகு உற்பத்தியாளரான கோரஸ் குழுமத்தை $11.3 பில்லியனுக்கு வாங்கியபோது, ஒரு இந்திய நிறுவனத்தால் மிகப்பெரிய கார்ப்பரேட் கையகப்படுத்தி சாதித்தது.
2008 ஆம் ஆண்டில், ஃபோர்டு மோட்டார் நிறுவனத்திடமிருந்து ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆகிய எலைட் பிரிட்டிஷ் கார் பிராண்டுகளை டாடா மோட்டார்ஸ் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்தது. 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், இந்திய வாகன நிறுவனத்தால் இதுவரை இல்லாத மிகப்பெரிய கையகப்படுத்துதலைக் குறித்தது.
அடுத்த ஆண்டு, டாடா நிறுவனம் டாடா நானோவை அறிமுகப்படுத்தியது. இது ஒரு சிறிய ரக கார். இதன் விலை சுமார் ரூ.100,000. 10 அடி (3 மீட்டர்) நீளம், சுமார் 5 அடி (1.5 மீட்டர்) அகலம் கொண்டதாக இருந்தாலும், மிகவும் பிரபலமான “மக்கள் கார்” இதி. ஐந்து பேர் வரை அமரக்கூடியது.
டாடாவின் வார்த்தைகளில், “பாதுகாப்பான, மலிவுவிலை , அனைத்தையும் வழங்கும். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள மில்லியன் கணக்கான நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு ஏற்ற கார்.
இந்த நிலையில் டிசம்பர் 2012 இல் டாடா குழுமத்தின் தலைவராக டாடா ஓய்வு பெற்றார். அவருக்கு பின்பு டாடா குழுமத்தின் தலைவராக பதவியேற்ற சைரஸ் மிஸ்திரி பல பிரச்சனைகளுக்கு பின்பு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 2016 முதல் இடைக்காலத் தலைவராக அவர் சிறிதுகாலம் பணியாற்றினார்.
டாடா குழுமத்தின் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டபோது ரத்தன் டாடா ஜனவரி 2017 இல் ஓய்வு பெற்றார். இப்போது இந்தியாவிலேயே சிறிய விலங்குகளுக்கான மருத்துவமனையை ரூ.165 கோடி செலவில் ரத்தன் டாடா தற்போது உருவாக்கி வருகிறார்.