2030க்குள் இந்திய பங்குச் சந்தை 10 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும்: ஜெஃப்ரிஸ் கணிப்பு!
உலகளாவிய முதலீட்டு ஆலோசனை நிறுவனமான ஜெஃப்ரிஸ், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா மேலும் ஏற்றம் காணும் என கணித்துள்ளது. 2027ஆம் ஆண்டில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் எனவும், 2030க்குள் இந்திய பங்குச் சந்தை 10 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் எனவும் உலகளாவிய முதலீட்டு ஆலோசனை நிறுவனமான ஜெஃப்ரிஸ் கணித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 7 சதவீதம் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதமாக 3.6 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், 8ஆவது பெரிய பொருளாதாரத்தில் இருந்து 5ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உயர்ந்துள்ளது.
“அடுத்த 4 ஆண்டுகளில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5 டிரில்லியன் டாலரைத் தொடும். இதன் மூலம், 2027 ஆம் ஆண்டில் 3ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும். ஜப்பான் மற்றும் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, நிறுவன வலிமை மற்றும் நிர்வாகத்தில் முன்னேற்றம் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும்.” எனவும் ஜெஃப்ரிஸ் கூறியுள்ளது.
இந்தியாவின் சந்தை மூலதனம் தற்போது 4.5 ட்ரில்லியன் டாலராக உள்ளது. உலகளவில் இது 5ஆவது பெரிய சந்தை மூலதனம். ஆனால் உலகளாவிய சந்தை குறியீடுகளில் 1.6 சதவீதம் என்ற குறைந்த அளவில் 10ஆவது இடத்தில் உள்ளது.
இருப்பினும், சில காரணிகளால் இது மாறக்கூடும் என கணித்துள்ள ஜெஃப்ரிஸ் அறிக்கை, “கடந்த 15-20 ஆண்டுகால வரலாறு மற்றும் புதிய பட்டியல்களுக்கு ஏற்ப சந்தை வருமானம் ஆகியவற்றை பார்த்தால் 2030க்குள் இந்திய பங்குச் சந்தை 10 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும். உலகின் பெரிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையை புறக்கணிக்க இயலாது.” எனவும் கூறியுள்ளது.
“2017 இல் ஜிஎஸ்டி அமலாக்கம், கார்ப்பரேட் மற்றும் வங்கித்துறையின் திவால் சீர்திருத்தங்கள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம், சாலைகள், விமான நிலையங்கள், இரயில்வே போன்றவற்றின் மீதான அரசின் கவனம், யுபிஐ போன்ற டிஜிட்டல் உட்கட்டமைப்பு போன்ற சில முக்கிய சீர்திருத்தங்கள் ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்புக்கு உதவியுள்ளன.” என ஜெஃப்ரிஸ் அறிக்கை கூறியுள்ளது.
பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் இந்தியா அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்களைக் கண்டுள்ளது. இது அதன் அறிவுசார் மற்றும் மூலதனத்தில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி, அதன் முழுத் திறனையும் உணர்ந்து கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என இந்த அறிக்கையை உருவாக்கிய ஜெஃப்ரிஸ் குழுவின் மூத்த உறுப்பினர் கிறிஸ்டோஃபர் உட் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, 7 சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் 12-15 சதவீத வருவாய் வளர்ச்சியைக் கணிப்பதற்கான சாத்தியக்கூறுகல் இருப்பதாக கிறிஸ்டோஃபர் உட் கூறுகிறார். “ஸ்டார்ட்-அப் துறை, வளர்ந்து வரும் உள்ளூர் சொத்து மேலாண்மை ஆகியவை ஆற்றல் மிக்கதாக உள்ளது. இதன் பொருள், பங்குச் சந்தை இப்போது முதன்மையாக உள்நாட்டு முதலீடுகளால் இயக்கப்படுகிறது. இது கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு முதலீடுகளால் இயக்கப்பட்டது.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.