விரைவில் ஜொலிக்கப் போகும் சென்னை சாலைகள்: ஜப்பான் நிறுவனம் கொட்டிய கோடிகள்!
இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஒன்பது திட்டங்களுக்கு 232.209 பில்லியன் ஜப்பானிய யென் நிதியை அதிகாரப்பூர்வ அபிவிருத்தி உதவி கடனாக வழங்க ஜப்பான் அரசு உறுதியளித்துள்ளது. அந்த வகையில், சென்னை சுற்றுவட்டச் சாலை (2ஆவது கட்டம்) கட்டுமானத்திற்கான திட்டத்திற்காக 49.85 பில்லியன் ஜப்பான் யென், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,809 கோடி கடன் வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) தெரிவித்துள்ளது.
ஜப்பான் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ‘சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடத்திற்கான விரிவான ஒருங்கிணைந்த மாஸ்டர் பிளான் (2015)’ திட்டத்தின் முதன்மையான திட்டங்களில் ஒன்றாக சென்னை சுற்றுவட்டச் சாலை வைக்கப்பட்டுள்ளது என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரப் பகுதியில் வேகமாக அதிகரித்து வரும் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வது, நெரிசலை குறைப்பது, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் இருந்து போக்குவரத்து நேரத்தை சுமார் 40 நிமிடங்கள் குறைப்பது (திட்டத்தின் 1 மற்றும் 2ஆம் கட்டம் மூலம்) மற்றும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
26.3 கிமீ சுற்றுவட்டச் சாலையை நிர்மாணிப்பதன் மூலமும், நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகளை (ITS) அறிமுகப்படுத்துவதன் மூலமும் மாநிலத்தின் தெற்குப் பகுதிக்கான இணைப்பை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் இத்திட்டத்தின் முதற்கட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் JICA கையெழுத்திட்டது. அதன்படி, மொத்தம் 24.5 கிமீ தூரத்திலான வடக்குப்பகுதி சுற்றுவட்டச் சாலைக்கு நிதி ஆதரவு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக, இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் சுற்றுவட்டச் சாலையின் தெற்குப் பகுதியான பிரிவு 5 ஐ உருவாக்குவதற்கும், பிரிவு 2 முதல் 5 வரை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகளை (ITS) அறிமுகப்படுத்துவதற்கும் JICA நிறிவனம் கடன் அளிக்கவுள்ளது.
இந்த அதிகாரப்பூர்வ ஒப்பந்தமானது, நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) இந்திய தலைமைப் பிரதிநிதி சைட்டோ மிட்சுனோரி ஆகியோருக்கு இடையே கையெழுத்தாகியுள்ளது.