தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு – சபாநாயகர் அறிவிப்பு!
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கூடுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 12ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழக அரசு தயாரித்த உரையுடன் உடன்படவில்லை என கூறி அதனை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
ஆளுநர் ஆர்.என். ரவி புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆனால், அவையில் உரை நிகழ்த்தப்பட்ட பின்னர், தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னரே ஆளுநர் ரவி அவையிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழக அரசு தயாரித்து தந்த ஆளுநர் உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.
இதையடுத்து, கடந்த 13, 14ஆம் தேதிகளில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து கடந்த 15ஆம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து, 2024-2025ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அதற்கு அடுத்த நாள் பிப்ரவரி 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 4ஆவது ஆண்டாக தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
.இதையடுத்து, பட்ஜெட்கள் மீதான விவாதம் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று (பிப்ரவரி 22ஆம் தேதி) பட்ஜெட் மீதான விவாதத்துக்கு 2 அமைச்சர்களும் பதில் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்ததையடுத்து, சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.