15 ஆண்டுகளாக தொடரும் சோகம்.. சேப்பாக்கத்தில் ஆர்சிபி அணியை கோர்த்துவிட்ட பிசிசிஐ.. சம்பவம் உறுதி!
16 ஆண்டு கால ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆர்சிபி அணி ஒரேயொரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதி தொடங்கி முதல் 15 நாட்களில் நடக்கவுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது.
இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 9வது முறையாக முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. இதனை தொடர்ந்து மார்ச் 26ஆம் தேதி குஜராத் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்திலும், மார்ச் 31ஆம் தேதி டெல்லியை அணியை எதிர்த்து விசாகப்பட்டினத்திலும், ஏப்ரல் 5ஆம் தேதி ஐதராபாத் அணியை எதிர்த்து ஐதராபாத் மைதானத்திலும் சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது.
சிஎஸ்கே அணி முதல் போட்டியிலேயே பலம் வாய்ந்த ஆர்சிபி அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இதனால் வெற்றிகரமாக சிஎஸ்கே அணி தொடரை தொடங்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி 2008ஆம் ஆண்டு முதல் சீசனிலேயே சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
அதன்பின் சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி சென்னை அணியை ஒருமுறை கூட வென்றதில்லை. 2008 முதல் 2019 வரை 7 முறை ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கியுள்ளன. இதில் ஆர்சிபி அணி ஒரு முறையும், சிஎஸ்கே அணி 6 முறையும் வென்றுள்ளன.
இதனால் 15 ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்கு நடந்து வரும் சோகம் மறையுமா என்ற கேள்வி அந்த அணி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இருப்பினும் ஆர்சிபி அணியின் நல்ல ஸ்பின்னர்கள் இல்லை. சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிபெற வேண்டுமென்றால் கண்டிப்பாக 3 தரமான ஸ்பின்னர்கள் இருக்க வேண்டும். இதனால் மீண்டும் சிஎஸ்கே அணி வெற்றி வரலாற்றை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.