பெயிண்ட் பிஸினஸில் களமிறங்கிய ஆதித்யா பிர்லா குழுமம்! நம்பர் 1 இடத்தை பிடிப்பதே லட்சியம்!
இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் பெயிண்ட் தொழில் என்பது நல்ல வளர்ச்சி அடைந்து வரும் துறையாக இருக்கிறது. இந்த துறையில் தற்போதைக்கு ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் பெர்ஜர் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களே முன்னிலையில் இருக்கின்றன. இவர்களுடன் போட்டிப்போடும் வகையில் ஆதித்யா பிர்லா குழுமம் பிர்லா ஓபஸை களமிறக்கியுள்ளது.
பிர்லா ஓபஸ் பெயிண்ட் அறிமுகம்: ஆதித்யா பிர்லா குழுமத்தின் பிரதான நிறுவனமான கிராசிம் இண்டர்ஸ்டிரீஸ் -இன் கீழ் பிர்லா ஓபஸ் ‘Birla Opus’ என்ற பெயிண்ட் நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் என முதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளது.
ஓராண்டுக்கு 1,332 மில்லியன் லிட்டர்கள் பெயிண்ட் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் இந்நிறுவனம் களமிறங்கியுள்ளது. ஹரியானாவில் ஏற்கனவே பெயிண்ட் தயாரிக்கும் ஆலையில் உற்பத்தி தொடங்கியுள்ளது. கூடுதலாக 5 இடங்களில் ஆலைகளில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மார்ச் மாதத்தில் இருந்து விற்பனை: மார்ச் மாதம் மத்தியில் இருந்து பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பிர்லா ஓபஸ் நிறுவனத்தின் பெயிண்டுகள் விற்பனைக்கு வந்துவிடும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 6 ஆயிரம் சிறுநகரங்களுக்கு விநியோகத்தை விரிவுபடுத்துவது என திட்டமிட்டுள்ளது.
அதே போல ஜூலை மாதத்திற்கு 1 லட்சம் மக்கள் தொகை கொண்ட அனைத்து இந்திய நகரங்களுக்கும் பிர்லா ஓபஸ் பெயிண்ட் விநியோகம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலிடத்தை பிடிப்பதே நோக்கம்: ஆதித்யா பிர்லா குடும்பத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லா, இந்தியாவில் கட்டுமான துறை வளர்ச்சிக்கு ஏற்ப பெயிண்ட் வணிகமும் நல்ல வளர்ச்சியை தருகிறது என கூறியுள்ளார். எந்த ஒரு பெயிண்ட் நிறுவனமும் ஒரே நேரத்தில் பல ஆலைகளுடன் செயல்பட தொடங்கியதில்லை. ஆனால் ஆதித்யா பிர்லா குழுமம் அதை செய்து காட்டியுள்ளது என்றார்.
எனாமல் பெயிண்டுகள், வாட்டர் பேஸூடு பெயிண்டுகள் என 145க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் விற்பனைக்கு வர உள்ளன. எக்கானமி, ப்ரீமியம், லக்சூரி என மூன்று வகைகளில் மாபெரும் பிஸினஸ் திட்டத்துடன் பிர்லா ஓபஸ் களத்தில் இறங்கியுள்ளது. 2,300 வகையான நிறங்களில் பெயிண்டுகள் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கிராசிம் இண்டஸ்டிரீஸ் நிறுவனம் பெயிண்ட் தொழிலுக்கு என மட்டும் 1,979 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தியாவில் பெயிண்ட் விற்பனையில் முதலிடத்தை பிடிக்கும் நோக்கில் ஆதித்யா பிர்லா நிறுவனம் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இதனை அடுத்து ஜெப்ரீஸ் மற்றும் மார்கன் ஸ்டான்லி தரகு நிறுவனங்கள், கிராசிம் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 2,500 ரூபாய் வரை உயரலாம் என கணித்துள்ளன.
இந்தியாவில் பெயிண்ட் சந்தையானது 1 லட்சம் கோடி மதிப்புள்ளதாக உயரும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.