பெங்களூரில் புதிய பிரச்சனை.. புதன், வியாழக்கிழமை மட்டுமே ஏன் இப்படி..?!
பெங்களூர் நகரம் ஐடி, பல மொழி கலாச்சாரம், எப்போதுமே இளைஞர்களால் நிரம்பி வழியும் நகரம் எனப் பல சிறப்புகளைக் கொண்டு இருந்தாலும் இந்நகரின் மோசமான டிராபிக்கிற்குத் தான் பெரிய அளவில் பேமஸ் ஆக உள்ளது.
லாக்டவுன்-க்கு பின்பு கிட்டதட்ட ஒரு மாதம் பெங்களூர் நகரமே ஃப்ரீயாக இருந்தது இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. ஆனால் எப்போது அலுவலகங்கள் வொர்க் ப்ரம் ஹோம் சலுகையைக் கட் செய்து விட்டு ஊழியர்களை அலுவலகத்திற்கு வர உத்தரவு வெளியானது முதல் டிராபிக் பிரச்சனை பழைய நிலையை விடவும் மோசமாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக வாரத்தில் புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பெங்களூர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக உள்ளது.
பொதுவாக வாரம் முழுக்க டிராபிக் பிரச்சனை இருப்பது பெங்களூர் நகரின் இயல்பு, ஆனால் சமீபத்தில் வாரத்தில் இவ்விரு நாட்களில் மட்டும் டிராபிக் அதிகமாக இருப்பதால் முன்கூட்டியே திட்டமிட வேண்டியுள்ளது. இதற்கு என்ன காரணம்..?
தற்போது பெங்களூரில் இருக்கும் 80 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களை வாரத்தில் 3 நாள் அலுவலகம் வருவதைக் கட்டாயமாக்கியுள்ளது. இதனால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து வேலை செய்யும் கலாச்சாரம் உருவாகியுள்ளது.
இதனால் 100க்கும் 90 பேர் வாரத்தில் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை தான் அதிகம் அலுவலகத்திற்கு வருகின்றனர். அதிலும் குறிப்பாகப் புதன் மற்றும் வியாழக்கிழமை பெங்களூர் சாலை முழுக்க வாகனங்களால் நிரம்பி வழிகிறது.
இதனால் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அலுவலகம் செல்லும் கூட்டம் மற்றும் வணிக நடவடிக்கைகளின் விளைவாக அதிக வாகன நெரிசலைக் காண்கிறது என்று மாநில தலைநகரின் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு புதன்கிழமையும் பெங்களூர் நகரத்தில் அதிகப்படியான வாகன நெரிசல் உள்ளது என்று பெங்களூரு காவல்துறை இணை ஆணையர் (போக்குவரத்து) எம்.என்.அனுசேத் தெரிவித்தார்.
பெங்களூரு போக்குவரத்துக் காவல்துறை, அவுட்டர் ரிங் ரோடு (ORR) மற்றும் சர்ஜாபூர் சாலை போன்ற முக்கியப் பகுதிகளில் உள்ள 33 ஐடி பார்க்களில் இருந்து ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு முறை போக்குவரத்துத் தரவை திரட்டி வருகின்றனர்.
மேலும் பணிபுரியும் பெரும்பாலான ஐடி வல்லுநர்கள் புதன்கிழமைகளில் தங்கள் அலுவலகங்களில் இருந்து வேலை செய்ய விரும்புகிறார்கள் என்று கூறினார்.
இதேபோல் பெங்களூரில் தற்போது பெரும்பாலான ஊழியர்களுக்கு வீக்கென்ட் வியாழக்கிழமை இரவே துவங்கிவிடுகிறது. மேலும் திங்கட்கிழமை ஆபீஸ் போக வேண்டும் என்ற கடுப்பான மனநிலை ஊழியர்களுக்கு மத்தியில் பெரிய அளவில் குறைந்துள்ளது.