பெங்களுரில் இருந்து டெல்லிக்கு பறந்த முக்கிய பொருள்..தேர்தல் நெருங்கியதும் நடக்கும் முக்கிய விஷயம்..!
அடுத்த சில மாதங்களில் இந்திய முழுவதும் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருவது ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் ஆணையம் இந்தியா முழுவதும் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் தேர்தலை நடத்த வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் பணியாற்றி வருகிறது.
இந்த நிலையில் தேர்தலுக்கு முக்கியமான 2 பொருளில் ஒன்று EVM இயந்திரம், மற்றொன்று வாக்காளர்களின் இடது ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் ஊதா நிற அடையாள மை. இந்த தேர்தலுக்காக மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் சுமாரக் 26 லட்சத்திற்கும் அதிகமான அழியாத மை பாட்டில்களை வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
கர்நாடக அரசு நிறுவனமான மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் 1962 ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையத்திற்காக மட்டுமே மை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மை தான் ஒருவர் வாக்களித்ததற்கான சான்றாக இடது கை ஆள்காட்டி விரலில் தடவப்படும் மை.
மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே முகமது இர்பான் பிடிஐ செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த வருடம் தேர்தல் ஆணையம் மொத்தமாக சுமார் 26.5 லட்சம் பாட்டில் மை ஆர்டர் செய்துள்ளது.
இன்று வரை, மொத்த பொருட்களில் சுமார் 60 சதவீதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மை சுமார் 24 மாநிலங்களுக்கான மை வழங்கப்பட்டுள்ளது என்றார். மீதமுள்ள ஆர்டர் மார்ச் 20 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று அவர் கூறினார்.
மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் தயாரித்து பேக் செய்யப்பட்டு உள்ள 10 மில்லி மை பாட்டில் பயன்படுத்தி சுமார் 700 பேரின் விரல்களில் குறியிட முடியும். ஒரு வாக்குச்சாவடியில் சராசரியாக சுமார் 1,200 வாக்காளர்கள் உள்ளனர். ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் தேர்தலுக்காக 12 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
டெல்லியில் உள்ள தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய இயற்பியல் ஆய்வகத்தால் இந்த மை முதன் முதலில் உருவாக்கப்பட்டது. இந்த அழியாத மை பொதுவாகத் தோலில் தடவப்படும் போது மூன்று நாட்களுக்கு நீடிக்கும், ஆனால் நகம் வளரும் வரை விரல் நகத்தில் சில வாரங்கள் நீடிக்கும்.
தொற்றுநோய்களின் போது வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை அடையாளம் காண சில மாநிலங்கள் இதே மை பயன்படுத்தப்பட்டன. இப்போதும் மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் தயாரித்த மை தான் சப்ளை செய்யப்பட்டது.
முன்னதாக, கண்ணாடி குப்பிகளில் மை வழங்கப்பட்டது, ஆனால் இப்போது பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது என்று இர்பான் கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, ஜனவரி மாதத்தில் இந்தியாவில் கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர், இதில் அதிகபட்சமாக 15.30 கோடி பேர் உத்தரப் பிரதேசத்திலும், குறைந்தபட்சம் 57,500 பேர் லட்சத்தீவிலும் உள்ளனர்.