3 மணி திட்டம்.. அமெரிக்க டெக் நிறுவனங்கள் மத்தியில் இப்போ இதுதான் புது டிரெண்டா..?
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு நிறுவனம் தனது ஊழியர்களை மாலை 3 மணிக்குப் பின் சக ஊழியர்களுடன் ஹேங்கவுட் செய்ய வலியுறுத்துவது மட்டும் அல்லாமல், பணத்தைக் கொடுத்து சரக்கு அடிக்க அனுமதிக்கிறது.
ஒவ்வொரு நிறுவனமும், ஊழியர்கள் மத்தியிலான நட்புறவை மேம்படுத்தவும், நிறுவனத்தின் செயல்திறன் அதிகரிக்கவும் பல முயற்சிகள் எடுத்து வருகிறது. முன்பெல்லாம் டீம் லன்ச் சென்றாலே பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.
ஆனால் இது Gen Z காலம், இன்றைய இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்பு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இதனால் நிறுவனங்கள் பல புதிய உக்திகளை கையாள துவங்கியுள்ளது.
இந்த வகையில் அமெரிக்காவின் கிளவுட் அடிப்படையிலான செக்யூரிட்டி நிறுவனமான வெர்கடா (Verkada) 3-3-3 பெர்க் என்று அழைக்கப்படும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள், நிறுவனத்தின் செலவில் மாலை 3 மணிக்குப் பிறகு உணவு மற்றும் மதுபானம் அருந்த வெளியே செல்லலாம். மேலும் ஒவ்வொரு பணியாளரும் 30 டாலர் வரையில் நிறுவன பணத்தைச் செலவழிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதுக்குறித்து Verkada நிறுவனத்தின் CFO, Kameron Rezai கூறுகையில், இந்த திட்டத்தை ஹோட்டல்களில் happy hours-ல் செய்ய முடிவு செய்துள்ளோம், இத்திட்டம் நிறுவன வளர்ச்சிக்குப் பெரிய அளவில் பலன் அளிக்கும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.
சுமார் 3.5 பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட இந்த கலிபோர்னியா Verkada நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தத் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தில் குறைந்தது 1,800 பேர், குறைந்தது ஒரு முறையாவது பங்கேற்றுள்ளனர்.
Verkada நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபிலிப் கலிஸ்ஸான் கூறுகையில், இத்திட்டம் மதியம் நேரத்தில் செயல்படுத்தப்படுவதால் ஊழியர்கள் நிறுவனம் அல்லது வேலை தொடர்பான ஏதாவது ஒன்றைப் பற்றி பேசுவார்கள், இறுதியில் அது எங்களுக்கு பயனளிக்கும் என்று தெரிவித்தார்.
100 பில்லியன் டாலர் மதிப்புள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்களுடன் போட்டிப்போட, இது போன்ற நடவடிக்கை ஒரு நிறுவனத்திற்கு முக்கியமானவை. இது ஊழியர்கள் மத்தியிலான உறவை பெரிய அளவில் மேம்படுத்தும்.