ஜேர்மன் பள்ளி ஒன்றில் ஒரு கத்திக்குத்து சம்பவம்: ஒருவர் கைது
ஜேர்மன் பள்ளி ஒன்றில் இன்று காலை கத்திக்குத்து சம்பவம் ஒன்று நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்து மாணவர்கள் காயம்
மேற்கு ஜேர்மனியிலுள்ள Wuppertal நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில், கத்திக்குத்து சம்பவம் ஒன்று நிகழ்ந்ததாகவும், சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மன் ஊடகமான Bild வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், மாணவர்கள் சக மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் கத்தி மற்றும் கத்திரிக்கோலால் தாக்கப்பட்டதாக ஆசிரியை ஒருவர் கூறியதாக அந்த ஊடகம் தெரிவிக்கிறது.
இந்த சம்பவம், இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றதாகவும், தகவலறிந்த மற்ற மாணவர்கள் தத்தம் வகுப்புகளுக்குள் மறைந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பொலிசார் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும், பின்னர் அனைவரும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த கத்திக்குத்து சம்பவத்தால் மாணவர்கள் நடுக்கத்தில் இருப்பதாக பொலிஸ் செய்தித்தொடர்பாளரான Stefan Weiand என்பவர் தெரிவித்துள்ளார்.