18 ஆண்டுகளூக்கு பிறகு துபாய் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்தியர்கள் ஐவர்: அவர்கள் செய்த குற்றம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 18 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவந்த 5 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணி
குறித்த ஐவரும் இந்தியாவின் தெலுங்கானா மாகாணத்தை சேர்ந்தவர்கள். கடந்த 20ம் திகதி ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஐவரையும் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

தெலுங்கானா மாகாணத்தில் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த ஐவரும். ஐக்கிய அமீரகத்தில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர். துபாய் மாகாணத்தில் அமைந்துள்ள சோனாபூர் தொழிலாளர் முகாமில் தங்கியிருந்தார்கள்.

கடந்த 2005ல் இந்த ஐவருக்கும் நேபாள நாட்டவரான பாதுகாப்பு காவலர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் ஒருகட்டத்தில் மோதலாக வெடித்துள்ளது. இதில் அந்த நேபாள நாட்டவர் துரதிர்ஷ்டவசமாக மரணமடைந்துள்ளார்.

அந்த நபரை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தாக்கவில்லை என்றும், அந்த மரணம் ஒரு விபத்து என்றும் நீதிமன்றத்தில் இந்த ஐவரும் வாதிட்டுள்ளனர். இதனையடுத்து இந்த ஐவருக்கும் துபாய் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

18 ஆண்டுகளுக்கு பின்னர்
ஆனால் நேபாள நாட்டவர் தரப்பில் மேல்முறையீடு சென்றதை அடுத்து, 25 ஆண்டுகள் என சிறை தண்டனை அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த ஐவரின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு சமூக செயற்பாட்டாளர்கள் குழு, இந்திய தூதரகம் மற்றும் தெலுங்கானா மாகாண அரசாங்கம் என தொடர்ந்து போராடி வந்துள்ளனர்.

இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் ஐவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானா அமைச்சர் ஒருவர் நேபாளம் சென்று, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் தங்களுக்கு இந்த விவகாரத்தில் ஆட்சேபனை இல்லை என்பது தொடர்பான கடிதம் ஒன்றை பெற்று, துபாய் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னரே ஐவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அந்த ஐவரிடமும் கடவுச்சீட்டு உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை என்பதால், இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களுக்கு வெள்ளை கடவுச்சீட்டுகளை அனுமதித்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் பிப்ரவரி 20ம் திகதி இந்தியா திரும்பியுள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *