மஹிந்தரா Thar vs மாருதி சுசூகி Jimny: முன்னிலையில் எந்த கார்?
மஹிந்தராவின் தார் (Thar) காருக்கும் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஜிம்னி (Jimny) காருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்பட்டு வருகிறது. உண்மையிலேயே இது நிஜம்தானா? இரண்டு கார்களுமே சிறந்த ஆஃப் ரோடு வாகனங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இரண்டு கார்களின் விற்பனை எண்ணிக்கையை பார்த்தோமென்றால், மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது.
2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் மஹிந்தராவின் Thar 6,059 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. ஆனால் மாருதியின் Jimny வெறும் 163 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. மஹிந்தராவின் விற்பனை எட்டிப் பிடிக்க முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளதை இதிலிருந்து தெரிந்துகொள்ள முடியும். மஹிந்தராவின் Thar காரின் ஆரம்ப விலை ரூ.11.25 லட்சத்தில் தொடங்கி ரூ.17.20 லட்சம் வரை உள்ளது. அதுவே மாருதி நிறுவனத்தின் Jimny காரை எடுத்துக் கொண்டால், இதன் ஆரம்ப விலை ரூ.12.74 லட்சத்தில் தொடங்கி ரூ.14.95 லட்சம் வரை உள்ளது.
பார்ப்பதற்கு பெரிதாகவும் சிறந்த ஆஃப் ரோடு வாகனம் என்றும் வாடிக்கையாளர்களிடம் Jimny காருக்கு நற்பெயர் இருந்தாலும், இதன் விலைதான் பலருக்கும் தடங்கலாக இருக்கிறது. பல வாடிக்கையாளர்கள் Jimny காரின் விலை அதிகமாக இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள் என டீலர் தரப்பில் கூறப்படுகிறது. Jimny காரின் முக்கிய அம்சமே அதன் சக்திவாய்ந்த இஞ்சின். K15B 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் உள்ள இந்தக் கார், அதிகபட்சமாக 103bhp பவரையும் 134Nm இழுவிசையும் கொண்டுள்ளது. டிரான்ஸ்மிசனைப் பொறுத்தவரை 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. லேடர் ஃப்ரேம் சேசிஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் SUV காரில், ALLGRIP PRO 4WD தொழில்நுட்பம் உள்ளது. இதனால் சிறிய ரேஞ்சிலேயே கியரை எளிதாக மாற்ற முடியும்.
அதேசமயம் மஹிந்தராவின் Thar-ல் 1.5 லிட்டர் D117 CRDe டீசல் இஞ்சின் (117bhp பவர்/300Nm இழுவிசை), 2.2 லிட்டர் mHawk 130 CRDe டீசல் இஞ்சின் (130bhp பவர்/300Nm இழுவிசை) மற்றும் 2.0 லிட்டர் mStallion 150 TGDi பெட்ரோல் (150bhp பவர்/320Nm இழுவிசை) என மூன்று இஞ்சின் ஆப்ஷன் உள்ளது. 1.5 லிட்டர் டீசல் இஞ்சினில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்சினில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. அதுமட்டுமின்றி Thar-ன் 1.5 லிட்டர் டீசல் இஞ்சின் RWD டிரைவ் ஆப்ஷனையும், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிடர் பெட்ரோல் இஞ்சின் கார்கள் RWD மற்றும் 4WD ஆப்ஷன்களைக் கோண்டுள்ளன.