திருச்செந்தூரில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது..!

தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் திருநாளான நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமானும், குமரவிடங்கபெருமானும் தனித்தனி வெள்ளி குதிரையில் எழுந்தருளி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தியபின் 8 வீதிகளிலும் உலா வந்து மீண்டும் மேலக்கோவில் சென்றனர். நேற்று இரவு சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் தனித் தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *