மாணவர்களே ரெடியா ? இன்று முதல் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு..!

தமிழ்நாடு 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 50 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கின்றனர். அரசுப்பள்ளி மட்டுமின்றி, உதவிபெறும், தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை பதிவு செய்யப்படுகின்றன. இதில் மாணவர்கள் பெற்றோர் விவரங்கள், முகவரி, ஆதார், ரேஷன் உள்ளிட்ட விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஆனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலருக்கு ஆதார் எண் இல்லை. அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கி கணக்கு துவங்குதல் உள்ளிட்டவைகளுக்கு ஆதார் அவசியம் தேவைப்படுகிறது.

இதனால் ஆதார் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று (பிப்.,23) முதல் பள்ளிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. பணிகளை இம்மாதத்திற்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கோயம்புத்தூரில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக, சென்னை, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகளை 23 ஆம் தேதி முதல் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு திட்டங்களை செயல்படுத்தவும் அவர்களுக்கான விபரங்களை பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாகும் . ஒவ்வொரு தனிமனிதனின் விபரமும் ஆதார் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பதும் கட்டாயமாகும். இந்த நிலையில் பள்ளிகளில் படிக்க வரும் குழந்தைகளுக்கு ஆதார் பெறுவதற்கு சேவை மையங்களுக்கு செல்வதை தவிர்க்கும் வகையில் எல்காட் நிறுவனம் மூலம் வரும் 23ஆம் தேதி முதல் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், பள்ளி வளாகத்தில் ஆதார் பதிவு மற்றும் ஆதார் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பிப்பை ELCOT இன் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது, இதனால் நிரந்தர சேர்க்கை மையத்திற்கு பயணிக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்படும்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 23 ஆம் தேதி கோயம்புத்தூரில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். அதே நாளில் உங்கள் மாவட்டத்திலும் இதைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள், இதற்காக உங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கு ஏற்கனவே தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. எல்காட் நிறுவனத்தில் 770 பதிவு/அப்டேட்டிங் கிட் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்,

மாவட்ட நிர்வாகத்தால் திறம்பட அதனை சேவையில் பயன்படுத்தலாம். எல்காட் கிளை மேலாளர்கள் பதிவு ,புதுப்பித்தல் பணியை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து 770 கருவிகளையும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து சலுகைகள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்கு பள்ளிக் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இந்தத் திட்டத்தை மிகவும் உன்னிப்பாக மதிப்பாய்வு செய்ய வேண்டும். இறுதியாக, ஆதார் பதிவு, ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு நோக்கத்திற்காக எந்த குழந்தையும் பள்ளியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *