வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி..!
உள்நாட்டு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக மார்ச் 2024 வரை வெங்காயம் ஏற்றுமதி செய்ய கடந்த ஆண்டு தடை விதித்தது. இதனால் அண்டை நாடுகளில் வெங்காயம் விலை உயர்ந்தது.இந்த நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் வங்கதேசம், மொரீஷியஸ், பக்ரைன் மற்றும் பூடான் ஆகிய 4 நாடுகளுக்கு 54,760 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
வங்காளதேசத்திற்கு 50,000 டன் வெங்காயம், மொரீஷியசுக்கு 1,200 டன், பக்ரைனுக்கு 3,000 டன் மற்றும் பூட்டானுக்கு 560 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.அடுத்த மாதம் 31ம் தேதி வரை இந்த அளவு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
தனியார் வர்த்தகத்தால் மார்ச் 31-ந்தேதி வரை ஏற்றுமதி செய்யப்படும். வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து வந்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய வேண்டுகோள் விடுக்கின்றன. வெளியுறவுத்துறை அமைச்சகம் எவ்வளவு வழங்க வேண்டும் என மதிப்பிடுகிறது. அமைச்சர்கள் குழுவால் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.உள்நாட்டு வெங்காயம் வினியோகம் சீராக இருக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி, வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்தது.
விரைவில் மக்களவை தேர்தல் வரவிருக்கும் நிலையிலும், மார்ச் 31-ந்தேதிக்கு பிறகும் தடையை நீக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. ரபி (குளிர்காலம்) வெங்காய உற்பத்தி எதிர்பார்த்ததை விட குறைவாகத்தான் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.