கோயில் வருவாயில் இருந்து 10% வசூல்..! கர்நாடக சட்டசபை புதிய மசோதா ஒப்புதல்..!
கர்நாடகாவில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் கோயில்களிடம் இருந்து 10 சதவிகிதத்தை அரசு வசூலிக்கும் மசோதா கர்நாடகா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்: கர்நாடகா சட்டசபையில் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய கட்டளைகள் மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன் படி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் திருகோயில்களின் வருமானத்தில் 10 சதவீதத்தை அரசு வசூலிக்க இந்தச் சட்ட மசோதா அனுமதிக்கிறது.கர்நாடக அரசின் இந்த சட்டம் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே வார்த்தை மோதல்களுக்கு வித்திட்டுள்ளது.
இந்து விரோத கொள்கை என பாஜக சாடல்: இந்த மசோதா காங்கிரஸ் அரசின் இந்து விரோத கொள்கயைக் காட்டுவதாக பாஜக சாடியுள்ளது. முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான மாநில அரசு நிதியைத் தவறாக பயன்படுத்தக் கூடும் என்றும் பாஜக தரப்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , இந்த மசோதா மூலம் காங்கிரஸ் அரசு, தங்களின் காலி கஜானாவை நிரப்ப முயற்சிப்பதாக கூறியுள்ளார். மாநில அரசு ஏன் இந்து கோயில்களில் இருந்து வருமானம் ஈட்டப் பார்க்கிறது என்றும் மற்ற மத ஸ்தலங்களில் இருந்து இப்படி வசூலிக்கவில்லையே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலத்தில் தொடர்ந்து இந்து விரோத கொள்கைகளை கடைப்பிடித்து வரும் காங்கிரஸ் அரசு, தற்போது இந்து கோயில்களின் வருவாயை குறிவைத்துள்ளது என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
பாஜகவும் வசூலித்தது என காங்கிரஸ் பதில்: விஜயேந்திர எடியூரப்பாவின் கருத்துக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ராமலிங்க ரெட்டி, பாஜக தொடர்ந்து மத அரசியலில் ஈடுபடுவதாகச் சாடியுள்ளார். காங்கிரஸ் பல ஆண்டுகளாக இந்துக்களின் நலன்களையும் கோயில்களையும் தொடர்ந்து பாதுகாத்து வருவதாகவும், காங்கிரஸ் இந்து மதத்தின் உண்மையான ஆதரவாளர் என்றும் ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார்.
கோயில்களின் பணத்தை அரசாங்கம் எடுக்கவில்லை, தர்ம பரிஷத் நோக்கங்களுக்காகவே இது பயன்படுத்தப்படும் என விளக்கம் அளித்துள்ளார். பாஜக ஆட்சியில் இருந்த போது, 5 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் உள்ள கோயில்களில் இருந்து 5 சதவிகிதத்தை எடுத்தது. 25 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வரும் கோயில்களில் இருந்து 10 சதவிகிதத்தை எடுத்தது என கூறியுள்ளார்.
பொருளாதார ரீதியாக பலவீனமான அர்ச்சகர்களுக்கு உதவவும், அவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கவும் , கோயில்களை மேம்படுத்துவது ஆகியவை தர்ம பரிஷத் என்பதற்குள் அடங்கும் என தெரிவித்துள்ளார்.