இந்தியாவுக்கு வரும் துருக்கி நாட்டின் பிரபல ஜென் டைமண்ட்..!

துருக்கி நாட்டை சேர்ந்த பிரபல வைர நகை பிராண்டான ஜென் டயமண்ட் நிறுவனம் இந்தியாவின் முக்கிய மெட்ரோக்களான மும்பை, டெல்லி, பெங்களூரில் தனது கிளைகளைத் திறப்பதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த பிராண்ட் ஆரம்பத்தில் ஆன்லைன் தளம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. இது இந்தியாவின் இளைய தலைமுறையினரையும் நடுத்தர வயதினரையும் தனது இலக்காகக் கொண்டு தனது வர்த்தகத்தை துவங்க உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் வைர நகைகளுக்கு டிமாண்ட் அதிகரித்து வருவதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இந்தியர்களின் மனம் கவரும் வைர பிராண்டாக ஜென் டைமண்ட் உருவெடுக்க விரும்புகிறது.

ஜென் டைமண்ட் வியாபாரம் பெருமளவில் ஆன்லைனில் நடைபெறுகிறது. இந்தியாவில் ஆன்லைனில் வைரங்களை வாங்குபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இதன் காரணமாகவும் இந்தியச் சந்தையை ஜென் டைமண்ட் குறி வைக்கிறது.

இத்துடன் ஜென் டயமண்ட் அதன் சாம்ராஜ்ஜியத்தை இந்தியாவின் அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களில் அடுத்தடுத்த கட்டங்களில் விரிவுபடுத்த உள்ளது. அங்கு கடைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா குழுமத்தைச் சேர்ந்த பிரபல பிராண்டுகளுடன் போட்டியிட ஜென் டயமண்ட் ஆயத்தமாக உள்ளது.

ஜென் டயமண்ட் 2000 ஆம் ஆண்டில் இஸ்தான்புல்லில் எமில் குசெலிஸால் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 400 கடைகளை இந்த நிறுவனம் கொண்டுள்ளது.

ஜென் டயமண்ட் குழுமத்தின் தலைவரான எமில் குசெலிஸ், நீல் சோனாவாலாவுடன் இணைந்து பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளார்.

ஹாங்காங், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் நகை விநியோக நெட்வொர்க்கில் நிறைந்த அனுபவத்தைப் பெற்றுள்ள சோனாவாலா, டி பீர்ஸ் குழுமம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள முக்கிய சில்லறை வணிகச் சங்கிலிகளுடன் ஆலோசனைப் பங்கை வகிக்கிறார்.

எனவே இந்தியாவிலும் ஜென் டைமண்டின் வியாபாரத்தை விரிவுபடுத்த முக்கியப் பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீல் சோனாவாலா இந்தியாவின் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் உலகளவில் ஆன்லைனில் அதிகளவு வைரம் வாங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்குவார் எனத் தெரிகிறது.

சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் கடை வர்த்தக அனுபவங்களுடன் இந்தியாவில் வைர நகை ஷாப்பிங் அனுபவத்தை சிறப்பாக மாற்ற ஜென் டயமண்ட் திட்டமிட்டுள்ளது. சர்வதேச நகை டிரெண்டுகளை கட்டுபடியாகும் மலிவு விலையில் விற்பதற்கான வாய்ப்பைத் தரப் போவதாக நீல் சோனவாலா கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *