குடும்பத்தோட போகலாம், மைலேஜூம் அள்ளி கொடுக்கும்.. இத்தன பிளஸ் இருந்தா யாருதான் டொயோட்டா காரை வாங்காம இருப்பா!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் புகழ்பெற்ற எம்பிவி ரக கார் (MPV Car) மாடல்களில் இன்னோவா (Innova)-வும் ஒன்று. குடும்பத்துடன் பயணிக்கவும், லாங் டிராவலை மேற்கொள்ளவும் உகந்த வாகனமாக இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது. இந்தியாவில் தற்போது இந்த இன்னோவா இரண்டு விதமான அவதாரத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ஒன்று இன்னோவா க்ரிஸ்டா (Innova Crysta) என்கிற பெயரிலும், மற்றொன்று இன்னோவா ஹைகிராஸ் (Innova Hycross) என்கிற பெயரிலும் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இதில் இன்னோவா ஹைகிராஸே தற்போது விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி சாதனைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல் நாட்டில் (இந்தியர்கள் மத்தியில்) மிக சிறப்பான வரவேற்பை இன்னோவா ஹைகிராஸ் பெற்றுக் கொண்டிருக்கின்றது சான்றாக அமைந்துள்ளது. டொயோட்டா நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இன்னோவா ஹைகிராஸ் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன்படி பார்த்தால் இன்னோவா ஹைகிராஸ் விற்பனைக்கு வந்து 15க்கும் குறைவான (14) மாதங்களே ஆகின்றன.
இந்த நிலையிலேயே அது 50 ஆயிரம் யூனிட் விற்பனை எண்ணிக்கையை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கார் அதிகம் மைலேஜ் தரக் கூடியதாகவும், சற்றே பிரமாண்ட தோற்றம் கொண்டதாகவும் இருக்கின்றது. இதனாலேயே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இன்னோவா ஹைகிராஸ் குவித்துக் கொண்டிருக்கின்றது.
அதேவேளையில், அதிகம் பிரீமியம் தர அம்சங்களைத் தாங்கியதாகவும் இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது. இதுவும் இன்னோவா ஹைகிராஸ்க்கு வரவேற்பு இரட்டிப்பாக காணப்படுவதற்கான முக்கிய காரணியாக இருக்கின்றது. இரண்டு விதமான பவர்டிரெயின் தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டும் பெட்ரோல் மோட்டார்கள்தான்.
ஆனால், ஓர் பெட்ரோல் மோட்டாரில் ஸ்ட்ராங் ஹைபிரிட் வசதி வழங்கப்படுகின்றது. மற்றொன்று வழக்கமான பெட்ரோல் மோட்டார் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்தவகையில், 2.0 பெட்ரோல் மோட்டாருடனேயே ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகின்றது. மற்றொன்றில் 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மட்டுமே வழங்கப்பட்டிருக்கும்.
இதில், பெட்ரோல் மோட்டாரை மட்டுமே கொண்ட இன்னோவா ஹைகிராஸ் லிட்டர் ஒன்றிற்கு 16 கிமீ மைலேஜையும், ஸ்ட்ராங் ஹைபிரிட் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் லிட்டர் ஒன்றிற்கு 23 கிமீ மைலேஜையும் என்பது குறிப்பிடத்தகுந்தது. செல்ஃப் சார்ஜ் வசதிக் கொண்ட ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பமே இந்த அளவு அதிக மைலேஜை வழங்க உதவுகின்றது.
மைலேஜைப் போலவே சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த கார் மிக சிறப்பானதாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், வென்டிலேட் இருக்கை, பவர்டு ரியர் டோர், பின் பக்கத்திற்கான சன்ஷேட், மல்டி – ஸோன் ஏசி, எலெக்ட்ரோ குரோமிக் ஐஆர்விஎம் மற்றும் ஓட்டோமேன் இருக்கைகள் என ஏகப்பட்ட அம்சங்கள் இன்னோவா ஹைகிராஸ் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, பாதுகாப்பு அம்சமங்களும் மிக மிக தாராளமாக இன்னோவா ஹைகிராஸ் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆறு ஏர் பேக்குகள், ப்ரீ கொலிசன் சிஸ்டம், ஆட்டோ ஹை பீம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமாதிரியான பரந்த அளவில் பாதுகாப்பு அம்சங்களையும், பிரீமியம் தர அம்சங்களையும் இந்த கார் கொண்டிருப்பதானலேயே இந்தியர்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றது.